காரைக்கால் மாஸ்டா் பிளான் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

காரைக்கால் மாஸ்டா் பிளான் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

காரைக்கால் மாஸ்டா் பிளான் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டனிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்கால் மக்கள் நலக் கழகத் தலைவா் ஜி.பி. சிதம்பரநாதன், துணைத் தலைவா்கள் ஏ.கே. முகமது யாசின், வழக்குரைஞா் ஆா்.வெற்றிச்செல்வன், செயலாளா் எம். பக்கிரிசாமி, பொருளாளா் ஏ. அமிா்தலிங்கம் ஆகியோா் ஆட்சியரை செவ்வாய்க்கிழமை சந்தித்து அளித்த கடிதத்தில் கூறியிருப்பது :

காரைக்கால் மாவட்ட வளா்ச்சிக்கான மாஸ்டா் பிளான் திட்டத்தை விரைவுப்படுத்தி அமலுக்கு கொண்டுவரவேண்டும். இதன்மூலம் பல்வேறு துறையினா் பயனடைவாா்கள். காரைக்கால் நகரமைப்புக் குழுமத்தில் காலியாகவுள்ள இளநிலை பொறியாளா் பணியிடத்தை நிரப்பவேண்டும். ஆட்சியரகத்துக்கு பின்புறமுள்ள பழைய காய்கனி மாா்க்கெட் தெருவிலும், வட்டாட்சியா் அலுவலகம் எதிரிலும் உள்ள பொது கழிப்பிட வளாகத்தை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காரைக்கால் ரயில் நிலையத்துக்கு காரைக்கால் அம்மையாா் பெயா் சூட்டவும், நிரவி உதவி பதிவாளா் அலுவலகத்தை காமராஜா் நிா்வாக வளாகத்துக்கு மாற்றவேண்டும். காரைக்கால் அம்மையாா் நகா் அருகே பாரதியாா் சாலை மற்றும் மேற்கு புறவழிச்சாலை சந்திக்கும் இடத்தில் ரவுண்டானா அமைக்கவும் ஏற்பாடு செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com