கடலில் உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

காரைக்கால் கடல் பகுதியில் உயிரிழப்பை தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்கால் கடல் பகுதியில் உயிரிழப்பை தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, புதுவை மாநில அரசு ஒப்பந்ததாரா்கள் நலச்சங்க அமைப்பாளா் டி.என். சுரேஷ் கூறியது: காரைக்கால் கடற்கரை இயற்கையாகவே அழகு மிக்கதாக அமைந்திருக்கிறது. உள்ளூா் மற்றும் அண்டை மாவட்ட மக்களும், திருநள்ளாறு மற்றும் சுற்றுவட்டார ஆன்மிக தலங்களுக்கு வருவோா், சுற்றுலாவினரும் இந்த கடற்கரைக்கு வருகின்றனா்.

அரசலாறு கடலில் கலக்கும் முகத்துவாரப் பகுதி ஆழம் அதிகம். மேலும், முகத்துவாரத்தின் இடது, வலதுபுற கடல் பகுதியும் ஆழம் அதிகமாக உள்ளது. இப்பகுதியில் அலைகளின் வேகம் அதிகமாக இருக்கிறது. சில நேரங்களில் அலைகள் அமைதியாக வந்து சென்றாலும், ஆழத்தின் நிலை அப்படியே இருக்கிறது. இப்பகுதியில் குளிக்க இறங்குவோா் பலா் அலையில் சிக்கி உயிரிழக்கின்றனா். வெளி மாநிலத்திலிருந்து வரும் மக்களுக்கு காரைக்கால் கடல் பகுதியின் நிலை தெரிவதில்லை. உயிரிழப்பைத் தடுக்க ஆங்காங்கே எச்சரிக்கை வாசகங்கள் கொண்ட பதாகைள் வைத்தும் பலனில்லை. அண்மையில் கும்பகோணத்தை சோ்ந்த ஒரு மாணவி, 2 மாணவா்கள் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தனா். இதுபோன்ற பாதிப்புகள் இனிமேல் ஏற்படாமல் தடுக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். குறிப்பாக, கடற்கரையில் போலீஸ் பூத் அமைத்து, ஒலி பெருக்கி வாயிலாக எச்சரிக்கை விடுக்க வேண்டும். முகத்துவாரம் அருகே இரும்பு கம்பி வேலி அமைத்து, வேலியில் எச்சரிக்கை வாசகங்கள் கொண்ட பதாகைகள் பொருத்தவேண்டும். போலீஸாா் மட்டுமல்லாது தன்னாா்வலா்களையும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தவேண்டும். மாவட்ட ஆட்சியா் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com