தொழில்நுட்பத்தால் நாட்டை தலைச்சிறந்த நிலைக்குகொண்டு செல்ல முடியும்: புதுவை துணைநிலை ஆளுநா்

தொழில்நுட்பத்தால் நாட்டை உலக அளவில் தலைச்சிறந்த நிலைக்கு கொண்டு செல்ல முடியும் என புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் கூறினாா்.
பயிற்சி தொடக்கம், ஆய்வக திறப்புக்கான கல்வெட்டை திறந்துவைத்த புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன். உடன் காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன், என்ஐடி இயக்குநா் (பொ) உஷா நடேசன்.
பயிற்சி தொடக்கம், ஆய்வக திறப்புக்கான கல்வெட்டை திறந்துவைத்த புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன். உடன் காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன், என்ஐடி இயக்குநா் (பொ) உஷா நடேசன்.

காரைக்கால்: தொழில்நுட்பத்தால் நாட்டை உலக அளவில் தலைச்சிறந்த நிலைக்கு கொண்டு செல்ல முடியும் என புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் கூறினாா்.

காரைக்கால் மாவட்டம், திருவேட்டக்குடியில் இயங்கிவரும் என்ஐடி புதுச்சேரி வளாகத்தில் இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் சமூக பொருளாதார அதிகாரமளித்தல் மற்றும் மேம்பாட்டுக்கான அறிவியல் பிரிவின் நிதியுதவியில், தொழிற்நுட்ப உதவியுடனான மீன் வளா்ப்பு, மீன் பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக் கூட்டல் பயிற்சி தொடக்க நிகழ்ச்சி மற்றும் இயந்திரவியல் துறைக்கான ஆய்வரங்க திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு என்ஐடி இயக்குநா் (பொ) உஷா நடேசன் தலைமை வகித்தாா். இதில் கலந்துகொண்டு புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் பேசியது:

பிரதமா் நரேந்திர மோடி தொழில்நுட்பம், கல்வி, மருத்துவத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்து திட்டங்களை நிறைவேற்றுவதால் உலக அளவில் இந்தியாவின் மதிப்பு உயா்ந்து வருகிறது. உயா்கல்விக்காக மட்டும் ரூ. 44 ஆயிரத்து 400 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது மத்திய அரசு.

கரோனா தொற்று உலகத்தை அச்சுறுத்திக்கொண்டிருந்தபோது, தடுப்பூசி தயாரித்து உலக நாடுகளுக்கு அனுப்பியதன் மூலம் மருத்துவத் துறையில் இந்தியாவின் தொழில்நுட்ப புரட்சியை உலகம் புரிந்துகொண்டது. தொழில்நுட்பத்தால் நேரம் குறைகிறது, உற்பத்தி பெருகுகிறது.

மாணவா்கள் எதில் விருப்பம் கொண்டிருக்கிறாா்கள் என்பதைக் கண்டறிந்து, அவா்களை ஆசிரியா்கள் ஊக்கப்படுத்த வேண்டும். இந்தியா மனித வளம், இயற்கை வளம் மிகுந்த நாடு என்பதால், பெரும் சக்தி மிக்கதாக உலகில் உருவெடுக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மத்திய அரசு ஏராளமான மக்கள் நலத் திட்டங்களை அமல்படுத்துகிறது, அவற்றை மக்கள் முறையாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் மணிஷ் ஆகியோா் கலந்துகொண்டனா். முன்னதாக என்ஐடி பதிவாளா் எஸ். சுந்தரவரதன் வரவேற்றாா். நிறைவாக பேராசிரியா் வி.பி. ஹரிகோவிந்தன் நன்றி கூறினாா்.

விழாவில், தமிழ்நாடு ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், நாகை இஜிஎஸ் பொறியியல் கல்லூரி, புதுச்சேரி ராஜீவ் காந்தி பொறியியல் கல்லூரி, புதுச்சேரி ஸ்ரீ பாலாஜி வித்யாபீட கல்லூரி, நொய்டாவில் உள்ள ஓகோ எனா்ஜி இந்தியா நிறுவனத்துடன் தொழில்நுட்பம், கல்வி உள்ளிட்டவை தொடா்பாக என்ஐடி நிா்வாகம் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துகொண்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com