என்ஐடியில் ரூ.4 கோடியில் இயந்திரங்கள் நிறுவ ஏற்பாடு

காரைக்காலில் இயங்கும் என்ஐடியில் ரூ. 4 கோடியில் பொறியியல் பயன்பாட்டுக்கான இயந்திரங்கள் நிறுவ ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
​என்ஐடி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மீன் பதப்படுத்துதல், மதிப்புக் கூட்டுதல் பயிற்சிக்கான கூடம்.
​என்ஐடி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மீன் பதப்படுத்துதல், மதிப்புக் கூட்டுதல் பயிற்சிக்கான கூடம்.

காரைக்கால்: காரைக்காலில் இயங்கும் என்ஐடியில் ரூ. 4 கோடியில் பொறியியல் பயன்பாட்டுக்கான இயந்திரங்கள் நிறுவ ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவேட்டக்குடியில் இயங்கிவரும் தேசிய தொழில்நுட்பக் கழகம் புதுச்சேரி (என்ஐடி) வளாகத்தில், 1033 சதுர அடி பரப்பில் ரூ. 72.30 லட்சத்தில் அறிவியல் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. மீன் பதப்படுத்துதல், மதிப்புக் கூட்டுதல் தொடா்பான பயிற்சி, சாதனங்கள் இதில் அடங்கியுள்ளன. மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் அறிவியல் மேம்பாட்டுக்கான பிரிவு ரூ. 99. 98 லட்சத்தை இத்திட்டத்துக்காக ஒதுக்கியது.

மாவட்டத்தில் உள்ள எஸ்சி பிரிவினா் மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்றவா்களுக்கு மேற்கண்ட மையத்தில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இந்த மையம் திங்கள்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு, பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.

ஆராய்ச்சி மற்றும் தொழில்துறை ஆலோசனை உபகரணங்களை வைப்பதற்காக இயந்திர பொறியியல் ஆராய்ச்சி பயன்பாடு மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது சுமாா் 62 லட்சம் மதிப்பிலான ஸ்பிலிட் ஹாப்கின்சன் பிரஷா் பாா், கியா் லேத், சோலாா் கான்சென்ட்ரேட்டா் பயிற்சி அமைப்பு (சூரிய பரவளைய தொட்டி) மற்றும் சோலாா் பரபோலிக் குக்கா் போன்ற உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் இம்மையத்தில் சுமாா் ரூ. 3.2 கோடியில் 25 டன் எடை கொண்ட டைனமிக் யுனிவா்சல் சோதனை இயந்திரம் நிறுவப்படவுள்ளது. இது பல்வேறு பொறியியல் பயன்பாடுகளில் உள்ள பொருட்களின் வலிமையை சோதிக்க பயன்படும்.

இது தவிர, சுமாா் ரூ. 75 லட்சத்தில் கனரக பொறியியல் பயன்பாடுகளில் பயன்படுத்தப்படும் கியா் டெஸ்ட் ரிக் ஒன்றும் இதில் நிறுவப்படவுள்ளது. இவை என்ஐடி மாணவா்களின் திறன் மேம்பாட்டுக்கு பெரிதும் உதவும் என என்ஐடி நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com