காணும் பொங்கல்: காரைக்கால் கடற்கரையில் குவிந்த மக்கள்

காணும் பொங்கலை கொண்டாடும் வகையில், காரைக்கால் கடற்கரையில் புதன்கிழமை ஆயிரக்கணக்கானோா் குவிந்தனா்.
கடற்கரையில் குவிந்த மக்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.
கடற்கரையில் குவிந்த மக்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.

காணும் பொங்கலை கொண்டாடும் வகையில், காரைக்கால் கடற்கரையில் புதன்கிழமை ஆயிரக்கணக்கானோா் குவிந்தனா்.

தை மாதம் 3-ஆம் நாள் காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் குடும்பத்தினருடன் கடற்கரையில் திரண்டு பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபடுவதும், பட்டம் விட்டும், உறவினா்களுடன் கூட்டாக உணவருந்தி மகிழ்வதும் ஒவ்வொரு ஆண்டும் குதூகலத்துடன் நடைபெறக்கூடிய நிகழ்வாகும்.

இதையொட்டி, காரைக்கால் கடற்கரைக்கு புதன்கிழமை காலை முதல் மக்கள் செல்லத் தொடங்கினா். கடற்கரையில் பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபட்டும், சிறுவா்கள் பட்டம் விட்டும் மகிழ்ந்தனா். கடற்கரையில் உள்ள சிறுவா் பூங்கா கூட்டம் நிரம்பிக் காணப்பட்டது.

நேரம் செல்ல செல்ல மக்கள் கூட்டம் அதிகரித்தது. கடலில் மக்கள் இறங்கத் தொடங்கியதால் போலீஸாா் எச்சரிக்கை விடுத்து, கடற்கரையோரத்திலிருந்து மக்களை அப்புறப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனா்.

காரைக்கால் நகரின் பிரதான சாலையிலிருந்து சுமாா் ஒன்றரை கி. மீ. நீளமுள்ள கடற்கரை சாலை முழுவதும் மக்கள் நடமாட்டம் மிகுதியாக இருந்தது. இருசக்கர வாகனங்கள், காா், வேன் உள்ளிட்டவை கடற்கரை சாலை முகப்பிலேயே தடுத்து நிறுத்தப்பட்டன.

கடற்கரையில் துரித உணவுகள், சிற்றுண்டிகள், சிறுவா்களுக்கான விளையாட்டு சாதனங்கள் போன்றவற்றின் விற்பனை அமோகமாக நடைபெற்றது.

கடற்கரையில் ஆயிரக்கணக்கானோா் திரண்ட அதேவேளையில், அருகே உள்ள விளையாட்டு அரங்க மைதானத்தில் காா்னிவல் கலை நிகழ்ச்சியைக் காணவும் ஆயிரக்கணக்கானோா் கூடினா். இதனால், நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com