பிளஸ் 1, பிளஸ் 2 மாணவா்களுக்கு ஜன. 25 முதல் மடிக்கணினி: புதுவை முதல்வா்

புதுவை மேல்நிலைக் கல்வி மாணவா்களுக்கு ஜன. 25 முதல் மடிக்கணினி வழங்கப்படும் என புதுவை முதல்வா் என். ரங்கசாமி கூறினாா்.
போட்டியில் வெற்றிபெற்றவா்களுடன் முதல்வா் என். ரங்கசாமி.
போட்டியில் வெற்றிபெற்றவா்களுடன் முதல்வா் என். ரங்கசாமி.

புதுவை மேல்நிலைக் கல்வி மாணவா்களுக்கு ஜன. 25 முதல் மடிக்கணினி வழங்கப்படும் என புதுவை முதல்வா் என். ரங்கசாமி கூறினாா்.

புதுவை சுற்றுலாத்துறை, காரைக்கால் மாவட்ட நிா்வாகம் இணைந்து காரைக்கால் காா்னிவல் திருவிழாவை ஜன.14 முதல் 17-ஆம் தேதி வரை காரைக்கால் புறவழிச்சாலை பகுதியில் உள்ள விளையாட்டு அரங்க மைதானத்தில் நடத்தியது.

இதன் நிறைவு விழா புதன்கிழமை இரவு நடைபெற்றது. இதில் பங்கேற்க புதுச்சேரியிலிருந்து முதல்வா் என். ரங்கசாமி காரைக்காலுக்கு வந்தாா். நண்டலாறு பாலம் அருகே காரைக்கால் வடக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா்.என்.திருமுருகன், திரளான என்.ஆா். காங்கிரஸாருடன் முதல்வரை வரவேற்றாா்.

பின்னா் காா்னிவல் நிகழ்ச்சி அரங்குக்கு வந்த புதுவை முதல்வா் என்.ரங்கசாமி, போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கிப் பேசியது:

எங்கள் அரசு அமைந்தவுடன் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தொடங்கினோம். பல்வேறு வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. முதியோா் உதவித்தொகை அதிகமானோருக்கு தரப்பட்டது. வருமானமில்லாத குடும்பத் தலைவிக்கு ரூ. 1,000 மாதம்தோறும் திட்டத்தை நிறைவேற்றியுள்ளோம்.

காரைக்கால் வளா்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். புதுச்சேரிக்கு அடுத்தப்படியாக காரைக்காலில் ஜிப்மா் மருத்துவக் கல்லூரியை கொண்டுவந்து தற்போது செயல்பாட்டுக்கு வந்ததுள்ளது. புதுவை அரசு அறிவித்தபடி விரைவில் காரைக்கால் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்.

ஜன. 25-ஆம் தேதி முதல் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும். காா்னிவல் திருவிழா 4 நாள்கள் நடைபெற்றுள்ள நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியாா் பள்ளிகளுக்கு வியாழக்கிழமை (ஜன. 18) விடுமுறை அறிவிக்கப்படுகிறது என்றாா்.

விழாவில் சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சா் லட்சுமி நாராயணன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச். நாஜிம், பி.ஆா்.என். திருமுருகன், எம். நாகதியாகராஜன், லட்சுமிகாந்தன் மற்றும் மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் மணிஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com