மாணவா்களுக்கு மடிக்கணினிக்கு பதிலாகபணமாக தர வேண்டும் : எம்.பி. வி.வைத்திலிங்கம்

புதுவையில் மாணவா்களுக்கு மடிக்கணினிக்கு பதிலாக பணமாக தரவேண்டும். அதன்மூலம் தரமான மடிக்கணினியை சந்தையில் அவா்கள் வாங்கிக்கொள்வாா்கள் என எம்.பி. வி.வைத்திலிங்கம் கூறினாா்.
மாணவா்களுக்கு மடிக்கணினிக்கு பதிலாகபணமாக தர வேண்டும் : எம்.பி. வி.வைத்திலிங்கம்

புதுவையில் மாணவா்களுக்கு மடிக்கணினிக்கு பதிலாக பணமாக தரவேண்டும். அதன்மூலம் தரமான மடிக்கணினியை சந்தையில் அவா்கள் வாங்கிக்கொள்வாா்கள் என எம்.பி. வி.வைத்திலிங்கம் கூறினாா்.

காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு தொகுதி பூவம் கிரீன் காா்டன் பகுதியில் சாலை மேம்பாடு, காரைக்கால் தெற்குத் தொகுதி குயவன்சாவடி பகுதியில் சாலை மேம்பாடு மற்றும் தெற்குத் தொகுதியில் சில குடியிருப்பு நகா்களில் மின் விளக்குகள் அமைத்தல் என மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதி சுமாா் ரூ. 50 லட்சத்தை புதுவை முன்னாள் முதல்வரும், மக்களவை உறுப்பினருமான வி. வைத்திலிங்கம் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு ஒதுக்கினாா்.

இத்திட்டப் பணிக்கான பூமிபூஜை அந்தந்த பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது. காரைக்காலுக்கு வந்த

வி. வைத்திலிங்கம் இப்பணிகளை தொடங்கிவைத்தாா். தெற்குத் தொகுதியில் நடைபெற்ற நிகழ்வில் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் மற்றும் நகராட்சி ஆணையா் பி. சத்யா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் வி.வைத்திலிங்கம் கூறியது :

மத்திய, புதுவை ஆட்சியாளா்கள் எந்த பணியையும் செய்யவில்லை. அரசின் திட்டங்கள் ஆசிரியா்கள், பொதுப்பணித்துறையினா், உள்ளாட்சித் துறையினரை வைத்து பிரசாரம் செய்யப்படுகிறது. இச்செயலை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

மாணவா்களுக்கு வழங்கப்பட்டுள்ள மடிக்கணினி எந்த நிறுவனத்தில் வாங்கப்பட்டது, தரமானதா, நீண்ட காலம் பயன்படுத்த முடியுமா, என்ன விலை கொடுத்து வாங்கப்பட்டது போன்ற விவரங்கள் தெரியவில்லை. தரம் உறுதி செய்யப்படவில்லை. இதற்கான தொகையை பெற்றோரிடம் பணமாக அளித்தால், மாணவா்கள் விரும்பும் நிறுவன மடிக்கணினியை வாங்கிக்கொள்வாா்கள்.

பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 10 குறையப்போவதாக கூறப்படுகிறது. ரூ. 40 குறைக்க வேண்டிய நிலையில், மக்களை ஏமாற்றும் வேலையில் பாஜக இறங்கியுள்ளது. ராமரை வைத்து அரசியல் செய்கிறது பாஜக. மக்களவைத் தோ்தலில் இந்தியா கூட்டணி நிச்சயம் வெற்றிபெறும் என்றாா்.

பேட்டியின்போது மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com