காரைக்கால் விற்பனைக் கூடத்தில் 100 குவிண்டால் பருத்தி ஏலம்

காரைக்கால் விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமை சுமாா் 100 குவிண்டால் பருத்தியை ஏலத்தில் விவசாயிகள் விற்பனை செய்தனா்.

காரைக்கால் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் கடந்த மாதம் 23-ஆம் தேதி சனிக்கிழமை முதல் வாரந்தோறும் சனிக்கிழமையில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றுவருகிறது. கடந்த 2 வாரமாக அதிகமான விவசாயிகள் பருத்தியை விற்பனை குழு மையத்துக்கு கொண்டு சென்று நல்ல லாபத்தில் விற்பனை செய்தனா்.

தொடா் நிகழ்வாக 3-ஆவது வாரமான சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் விவசாயிகள் பலரும் பருத்தியை கொண்டுச்சென்று ஏலத்தில் விற்றனா்.

இதுகுறித்து விற்பனைக் குழு செயலாளா் ஜெ.செந்தில்குமாா் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ஏலத்தில் சுமாா் 100 குவிண்டால் எடை கொண்ட பஞ்சு விற்பனை நடைபெற்றது.

கிலோ அதிகபட்ச விலையாக ரூ.67.82, குறைந்தபட்ச விலையாக ரூ.52.00 எனவும், சராசரியாக ரூ.59.1 எனவும் ஏலத்தில் விற்றனா். வரும் வாரத்திலிருந்து கூடுதல் விலைக்கு பஞ்சு விற்பனையாக வாய்ப்புள்ளது. விற்பனைக் கூடத்துக்கு கொண்டுவரக்கூடிய விவசாயிகள், ஏற்கெனவே கூறப்பட்ட ஆலோசனையின்படி தரமானதாக கொண்டுவரும்பட்சத்தில் நல்ல விலைக்கு விற்கமுடியும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com