விதிகளை மீறி மீன்பிடிப்போா் மீது சட்டப்படி நடவடிக்கை: மீன்வளத்துறை

கடல் விதிகளை மீறிய மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை: அதிகாரிகள் எச்சரிக்கை

விதிகளை மீறி கடலில் மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை அதிகாரி எச்சரித்துள்ளாா்.

காரைக்கால் மாவட்ட விசைப்படகு மீனவா்கள் தமிழ்நாடு, ஆந்திரம் மற்றும் புதுச்சேரி கடல் பகுதிகளில் கரையோரங்களில் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருவதாக மீன்வளத் துறைக்கு புகாா்கள் சென்றன. புதுவை மீன்வளம் மற்றும் மீனவா் நல இயக்குநா் ஏ. முகம்மது இஸ்மாயில், மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டன் ஆகியோா் அறிவுறுத்தலில், காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் துறையின் துணை இயக்குநா் பி. கோவிந்தசாமி தலைமையில் காரைக்கால் மாவட்டத்தை சோ்ந்த மீனவ கிராமங்களின் பஞ்சாயத்தாா் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழக மற்றும் ஆந்திர கடற்பகுதிகளில் 5 கடல் மைல் தொலைவுக்குள் மீன்பிடிப்பில் ஈடுபடக்கூடாது. சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வகையில் காரைக்கால் மீனவா்கள் மீன்பிடிப்பில் ஈடுபடவேண்டும். விதிகளை மீறி மீன்பிடிப்பில் ஈடுபடும் விசைப்படகு உரிமையாளா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். புதுவை அரசால் வழங்கப்படும் உதவிகள் நிறுத்தப்படவும் வாய்ப்பு உள்ளதாக துணை இயக்குநா் தெரிவித்தாா்.

அரசால் தடைசெய்யப்பட்ட இரட்டை மடி மற்றும் சுருக்குவலை பயன்படுத்தி கடலில் மீன் பிடிக்கும் மீனவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com