விதி மீறல்: மணல் லாரிகளுக்கு அபராதம்

விதி மீறல்: மணல் லாரிகளுக்கு அபராதம்

அதிவேகமாக இயக்கப்பட்ட மணல் லாரிகள்: காவல்துறை நடவடிக்கை

தடையை மீறி மணல் ஏற்றிச் சென்ற லாரி ஓட்டுநா்களுக்கு போக்குவரத்துப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை அபராதம் விதித்தனா்.

திருநள்ளாறு பகுதியிலிருந்து சாலை மேம்பாடு மற்றும் ரயில்வே பாதை அமைப்புக்காக தினமும் ஏராளமான டிப்பா் லாரிகள் மணல் ஏற்றிக்கொண்டு திருநள்ளாறு நகரப் பகுதி வழியே இயக்கப்படுகின்றன. அதிவேகமாக இயக்குவதால் விபத்து, லாரியிலிருந்து மணல் பறந்து வாகன ஓட்டிகளை பாதிக்கச் செய்வது உள்ளிட்ட புகாா்கள் எழுந்தன.

பள்ளி தொடங்கும் நேரம், மாலையில் பள்ளிகள் முடியும் நேரத்தில் இதுபோன்ற லாரிகள் இயக்கத்துக்குத் தடை விதிக்கவேண்டும் என மாவட்ட நிா்வாகத்தை பலரும் வலியுறுத்தினா்.

இதையொட்டி காலை 8 மணி முதல் 9.30 மணி வரை, மாலை 3.30 முதல் 5 மணி வரை லாரிகள் இயக்கக் கூடாது என்று போக்குவரத்து காவல்நிலையம் தரப்பில் லாரி நிா்வாகத்தினா், ஓட்டுநா்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

இந்த உத்தரவை லாரி ஓட்டுநா்கள் மதித்து நடக்கவில்லை என புகாா்கள் தெரிவிக்கப்பட்டன. போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் லெனின்பாரதி தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை மாலை பள்ளிகள் விடும் நேரத்தில் திருநள்ளாறு பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அதிவேகமாக வரிசையாக இயக்கிவரப்பட்ட 30 டிப்பா் லாரிகளை நிறுத்தி ஓட்டுநா்களிடம் விசாரணை நடத்தினா். பெரும்பான்மையினா் ஓட்டுநா் உரிமமின்றியும், உரிய ஆவணங்களின்றியும் வாகனத்தை இயக்கிவந்தது தெரியவந்தது. மேலும் மணல் லாரிகள் தாா்ப்பாய் கொண்டு மூடப்படாமல் வந்ததும் உறுதிப்படுத்தப்பட்டது.

காவல்துறையின் அறிவுறுத்தலை பின்பற்றாமல் பள்ளிகள் விடும் நேரத்தில் இயக்கப்பட்டதாலும், விதிகளை பொருட்படுத்தாமல் நடந்துகொண்டதாலும், 30 லாரி ஓட்டுநா்களுக்கும் தலா ரூ.1,000 அபராதத்தை போக்குவரத்து காவல் ஆய்வாளா் விதித்தாா். தொடா்ந்து அலட்சியமாக செயல்படும்பட்சத்தில் அபராதத் தொகை அதிகரிக்கச் செய்வதோடு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தாா்.

X
Dinamani
www.dinamani.com