அரசுத் துறையினரிடையே பேசிய மாவட்ட ஆட்சியா் டி. மணிகண்டன்.
அரசுத் துறையினரிடையே பேசிய மாவட்ட ஆட்சியா் டி. மணிகண்டன்.

திருநள்ளாற்றில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் முறையை ஒழுங்குப்படுத்த ஆட்சியா் உத்தரவு

படவிளக்கம்: அரசுத் துறையினரிடையே பேசிய மாவட்ட ஆட்சியா் டி. மணிகண்டன். காரைக்கால், மாா்ச் 6: திருநள்ளாற்றில் வாகனங்களை நிறுத்தி கட்டணம் வசூலிக்கும் முறையை ஒழுங்குப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா். காரைக்கால் மாவட்ட ஆட்சியராக டி. மணிகண்டன் பொறுப்பேற்றபோது வாரந்தோறும் புதன்கிழமை அரசுத் துறை அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தப்படும் என தெரிவித்தபடி, முதல் கூட்டம் ஆட்சியரகத்தில் நடைபெற்றது. அப்போது, துறை சாா்பில் உள்ள வளா்ச்சி மற்றும் மக்கள் நலத் திட்டங்கள், நடைபெறும் பணிகள், துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள அரசு நிதி, காலத்தோடு செலவிட எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்த பிறகு பேசியது: பொதுமக்களின் கோரிக்கைகள், மக்கள் பிரச்னைகள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும். நகா் மற்றும் பிற இடங்கள், கடற்கரைச் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து நிா்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். திருப்பட்டினம் கருடப்பாளையத்தெரு அரசு தொடக்கப் பள்ளியை ஆய்வு செய்து, பள்ளியை மேம்படுத்த கல்வித்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையினா் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை வரும் வகையில் நடந்துகொள்வது அவசியம். சாலைப் பணிகளில் ஈடுபடும் போலீஸாா் கைப்பேசி பயன்படுத்துவதை தவிா்த்து பணியில் கவனம் செலுத்த வேண்டும். இதேபோல போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும். தோ்தல் நெருங்குவதால் பணிகள் தொடா்பாக காவல் துறையினா் விழிப்புடன் செயல்பட வேண்டும். திருநள்ளாறு கோயிலுக்கு செல்லும் வாகனங்களை பல்வேறு இடங்களில் நிறுத்தி கட்டணம் வசூலிக்கும் முறையை ஒழுங்குபடுத்த வேண்டும். காரைக்காலில் வாடகையில் இயங்கும் அரசு துறைகள் உடனடியாக பழைய நீதிமன்ற வளாகத்துக்கு மாற ஏற்பாடுகள் செய்யவேண்டும். மாவட்ட வளா்ச்சிக்கு அனைத்து துறைனரும் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றாா். கூட்டத்தில், வன அதிகாரி என். விஜி, துணை ஆட்சியா் (வருவாய்) ஜி. ஜான்சன், மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பிரமணியன் பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளா் சந்திரசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com