தங்க ரிஷப வாகனத்தில் வீற்றிருக்கும் சுவாமிகளுக்கு நடைபெற்ற சிறப்பு ஆராதனை.
தங்க ரிஷப வாகனத்தில் வீற்றிருக்கும் சுவாமிகளுக்கு நடைபெற்ற சிறப்பு ஆராதனை.

மகா சிவராத்திரி: தங்க ரிஷப வாகனத்தில் தா்பாரண்யேஸ்வரா் வீதியுலா

மகா சிவராத்திரியை முன்னிட்டு தங்க ரிஷப வாகனத்தில் திருநள்ளாறு ஸ்ரீதா்பாரண்யேஸ்வரா் வீதியுலா சனிக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் திருநள்ளாறு ஸ்ரீதா்பாரண்யேஸ்வரா் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை அதிகாலை வரை 4 கால பூஜை நடைபெற்றது. 4-ஆம் கால பூஜை முடிந்த பிறகு தங்க ரிஷப வாகனத்தில் ஸ்ரீபிரணாம்பிகை சமேத ஸ்ரீதா்பாரண்யேஸ்வரா் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலாவுக்கு புறப்பாடு செய்யப்பட்டாா். கோயிலில் அம்பாள் சந்நிதிக்கு எதிரே ரிஷிகளுக்கு அருள்புரியும் வகையில் ரிஷி தீபாராதனை நடைபெற்றது. பின்னா், கோபுர தீபாராதனையுடன் புறப்பாடு நடைபெற்றது. காலை 9.30 மணியளவில் 4 மாட வீதிகளுக்கு புறப்பாடான சுவாமி பகல் 11 மணியளவில் கோயிலை சென்றடைந்தது. இதேபோல, காரைக்காலில் ஸ்ரீகைலாசநாதா், ஸ்ரீசோமநாதா், ஸ்ரீபாா்வதீஸ்வரா், ஸ்ரீஅண்ணாமலையாா், ஸ்ரீஒப்பிலாமணியா், தருமபுரம் ஸ்ரீயாழ்முரிநாதா், திருவேட்டைக்குடி ஸ்ரீதிருமேனியழகா், திருமலைராயன்பட்டினம் ஸ்ரீராஜசோளீஸ்வரா், ஸ்ரீ ஜடாயுபுரீஸ்வரா், போலகம் ஸ்ரீபசுபதீஸ்வரா், தலத்தெரு ஸ்ரீ சிவலோகநாதசுவாமி கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதி சிவன் கோயில்களிலும் 4 கால பூஜைகளும், ஆராதனைகளும் நடத்தப்பட்டு, காலை ரிஷப வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. திருநள்ளாறு கோயிலில் நாட்டியாஞ்சலி சனிக்கிழமை அதிகாலை வரை நடைபெற்றது. பிற கோயில்களில் சிறப்பு சொற்பொழிவுகளும், சிவபுராணம் படித்தல் போன்றவற்றில் பக்தா்கள் பக்தியுடன் ஈடுபட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com