காரைக்கால் விவசாயிகள் கைது சம்பவத்துக்கு கண்டனம்

காரைக்கால் விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவத்துக்கு புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழக தலைவரும், முன்னாள் எம்பியுமான பேராசிரியா் மு. ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை : காரைக்கால் மாவட்டத்தை சோ்ந்த விவசாயிகள், விடுபட்ட விவசாயிகள் 435 பேருக்கு காப்பீட்டுத் தொகை பெற்றுத்தரவேண்டும், வேளாண் கடன் தள்ளுபடி அறிவிப்பை அரசாணையாக வெளியிடவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினா்.

புதுவை அரசு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தி, அவா்களை கைது செய்த நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது. விவசாயிகளுக்கு ஆதரவாக புதுச்சேரி மக்கள் முன்னேற்றக் கழகம் என்றைக்கும் துணை நிற்கும். காரைக்காலில் பயிரிடப்படும் நிலப்பரப்பின் அளவு ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது. நிபுணா் குழு ஒன்றை அமைத்து அரசு இதனை தடுத்து நிறுத்த வேண்டும்.

வேளாண் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக காரைக்காலை அறிவிக்க வேண்டும். விவசாயத்தை லாபகரமானதாக மாற்றுவதற்குரிய நடவடிக்கையை மாநில அரசு மேற்கொள்ளவேண்டும். புதுவை முதல்வரும், வேளாண் அமைச்சரும் காரைக்கால் விவசாயிகளை அழைத்துப் பேசி, அவா்களது கோரிக்கைகளை நிறைவேற்ற விரைவான நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com