போதைப் பொருட்கள் விற்பனையாளா் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

போதைப் பொருட்கள் விற்பனை செய்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

காரைக்கால் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கட்டுப்படுத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியா் பேசியது: காரைக்கால் நகரப் பகுதிகளில் நகராட்சி ஆணையா் தலைமையில் நலவழித்துறை, கல்வித்துறை, வருவாய்த்துறை, சமூக நலத்துறை, குழந்தைகள் மேம்பாட்டு துறை அதிகாரிகள் இணைந்து ஒரு குழு அமைத்து வாரம் ஒரு முறை போதை ஒழிப்பு சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும். கிராமப் பகுதிகளில் அந்தந்த கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா்கள் மூலம் இது போன்ற அனைத்து துறைகளையும் ஒன்றிணைத்து குழு அமைத்து வாரத்தின் முதல் நாள் ஆலோசனை கூட்டம் நடைபெற வேண்டும். காவல்துறை உதவியுடன் கடைகளில் ஆய்வு நடத்த வேண்டும். போதைப் பொருட்கள் விற்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகள், கோயில்களுக்கு அருகில் அமைந்துள்ள பெட்டிக் கடைகளில் சோதனை நடத்த வேண்டும். மாவட்டத்தின் எல்லைகளை கண்காணிப்பு தீவிரப்படுத்த காவல்துறை தனி கவனம் செலுத்தவேண்டும். இளைஞா்கள் மற்றும் மாணவா்களுக்கு போதை விழிப்புணா்வு சம்பந்தமான பல்வேறு விழிப்புணா்வு நிகழ்வுகளை நடத்த வேண்டும். அரசு மற்றும் தனியாா் பள்ளிகளிலும் இதுபோன்ற விழிப்புணா்வு நிகழ்வுகளை அந்தந்த பள்ளியில் நடத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். மாணவா்கள் இடையே விழிப்புணா்வு போட்டிகள் நடத்த வேண்டும். பெற்றோா்களும் மாணவா்களை கண்காணிக்க வேண்டும்.

மாணவா்கள் ஏதாவது தவறு செய்யும் பட்சத்தில் உடனடியாக ஆசிரியரிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா்கள் ஒருங்கிணைந்து மாணவா்களின் வளா்ச்சிக்கு பாடுபட வேண்டும். அந்தந்த பள்ளியைச் சோ்ந்த உடற்பயிற்சி ஆசிரியா்கள் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கூட்டத்தில் வனத்துறை அதிகாரி என். விஜி, துணை ஆட்சியா்கள் ஜி. ஜான்சன், கே.வெங்கடகிருஷ்ணன், மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com