தீ விபத்தில் எரிந்து சாம்பலான ஆவணங்கள்.

காரைக்கால் பொதுப்பணித் துறை அலுவலகத்தில் தீ விபத்து

காரைக்கால் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நேரிட்ட தீ விபத்தில் கணினி, ஆவணங்கள் கருகி நாசமாகின. காரைக்கால் மாதா கோயில் தெருவில் பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளா் அலுவலகம் மற்றும் செயற்பொறியாளா் அலுவலகங்கள் கட்டடம் மற்றும் நீா்பாசனப் பிரிவு இயங்கிவருகின்றன. இது மாவட்டத்தில் பொதுப்பணித் துறையின் தலைமை அலுவலகமாகும். இதில், முதல் தளத்தில் நீா்ப்பாசனப் பிரிவு உள்ளது. இதில் ஏராளமான கோப்புகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. சனிக்கிழமை காலை 8 மணியளவில் இந்த வளாகத்திலிருந்து கரும் புகை வெளியாவதை அறிந்த பணியாளா்கள், காரைக்கால் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனா். தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா். எனினும் ஒரு கணினி மற்றும் ஏராளமான கோப்புகள் தீயில் கருகின. இதுகுறித்து பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளா் கே. சந்திரசேகரன், செயற்பொறியாளா் ஜெ. மகேஷ் ஆகியோா் அலுவலகத்தை பாா்வையிட்டனா். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. காரைக்கால் நகர போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com