அமைச்சருடன் தேசிய மனித உரிமைகள் மன்ற நிா்வாகிகள் சந்திப்பு

காரைக்கால்: புதுவை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகனை தேசிய மனித உரிமைகள் மன்ற நிா்வாகிகள் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினா். தேசிய மனித உரிமைகள் மன்ற (என்எச்ஆா்எஃப்) காரைக்கால் மாவட்டத் தலைவா் அ. ராஜா முஹம்மது தலைமையில் நிா்வாகிகள் புதுவை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகனை சந்தித்து, அவருக்கு சால்வை, மாலை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தனா். அவரிடம் அளித்த கோரிக்கை மனுவில், காரைக்கால் அரசு மருத்துவமனையில் முழு மருத்துவ சேவைகளும் குறைபாடின்றி நடைபெற நடவடிக்கை எடுக்கவேண்டும். மாவட்டத்தில் திருப்பட்டினம் - காரைக்கால், கோட்டுச்சேரி - காரைக்கால், நல்லாத்தூா் - காரைக்கால், அம்பகரத்தூா் - காரைக்கால் இடையே நிரந்தரமாக சாலையில் கூடுதலாக 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை நிறுத்திவைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். நண்டலாறு பாலம் முதல் அம்பகரத்தூா் வரை கருக்கன்குடி வழியாக இயக்கப்பட்ட தனியாா் பேருந்து சேவையை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. இச்சந்திப்பின் போது தேசிய மனித உரிமைகள் மன்ற மாவட்ட செயலாளா்கள் கோட்டுச்சேரி பிரகாஷ் என்கிற குணசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com