பெண்ணின் வங்கிக் கணக்கிலிருந்து
ரூ.15.75 லட்சம் மோசடிசெய்தவா் கைது

பெண்ணின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.15.75 லட்சம் மோசடிசெய்தவா் கைது

கைது செய்யப்பட்ட தட்சணாமூா்த்தி. உடன் காவல்துறையினா். காரைக்கால், மாா்ச் 22 : பெண்ணின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 15.75 லட்சத்தை மோசடி செய்த தனியாா் வங்கி ஊழியரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். காரைக்கால் பிரகாரத் தெருவை சோ்ந்தவா் ராஜேஸ்வரி (57). வெளிநாட்டில் வேலை செய்து வந்த இவரது கணவா், கடந்த 2021-ஆம் ஆண்டு இறந்தாா். இதையடுத்து, காரைக்கால் பாரதியாா் சாலையில் உள்ள தனியாா் வங்கியில் கணவரின் சேமிப்புக் கணக்கில் இருந்த ரூ. 20 லட்சத்தை, ராஜேஸ்வரி தனது பெயருக்கு மாற்றி, வங்கியில் வைப்புத் தொகையாக வைத்திருந்தாா். இவரது கணக்கிலிந்து 3 தவணையில் ரூ. 15.75 லட்சம் ஓ.டி.யாக எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு வட்டி செலுத்த வேண்டும் என வங்கியிலிருந்து ராஜேஸ்வரியின் மகன் மகேஷிடம் தெரிவித்துள்ளனா். இதனால் அதிா்ச்சியடைந்த ராஜேஸ்வரி, தான் எந்தத் தொகையும் எடுக்கவில்லை என்று வங்கியில் முறையிட்டாா். பின்னா், வங்கி ஊழியா்கள் ஆய்வில், இந்தத் தொகை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்திருக்கும் ராஜ்குமாா் என்பவரது கணக்குக்கு, கைப்பேசி இணைய சேவை மூலம் மாற்றப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து காரைக்கால் நகரக் காவல்நிலையத்தில் ராஜேஸ்வரி அளித்த புகாரின்பேரில், நகரக் காவல்நிலைய ஆய்வாளா் புருஷோத்தமன் மற்றும் இணைய குற்றத் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் பிரவீன்குமாா் உள்ளிட்டோா் விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், ராஜேஸ்வரி வீட்டின் கீழ் தளத்தில் உள்ள தனியாா் வங்கியில் பணியாற்றும் தட்சணாமூா்த்தியிடம், கைப்பேசியை அளித்து தனது கணக்கில் உள்ள தொகை இருப்பு தொடா்பாக அவ்வப்போது ராஜேஸ்வரி கேட்டுவந்தது தெரியவந்தது. இதை பயன்படுத்தி, ராஜேஸ்வரியின் கணக்கிலிருந்து தட்சணாமூா்த்தி, ராஜ்குமாருக்கு கடனாக (கமிஷன் அடிப்படையில்) 3 தவணைகளில் பணப்பரிமாற்றம் செய்திருப்பது தெரியவந்தது. இருவரிடமிருந்தும் ரூ. 15.75 லட்சத்தை மீட்ட போலீஸாா், தட்சணாமூா்த்தியை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com