விவசாயிகளிடம் ஆலோசனை கேட்ட பிறகே காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் பங்கேற்கவேண்டும்

காரைக்கால் மாவட்ட விவசாயிகளிடம் ஆலோசனை கேட்ட பிறகே காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் அரசு அதிகாரிகள் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, காரைக்கால் மாவட்ட டெல்டா விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் பொன். ராஜேந்திரன் கூறியது: ஏப்.4-ஆம் தேதி காவிரி நீா் மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் புதுவை மாநிலத்தில் இருந்து கலந்துகொள்ள செல்லும் அரசு உயரதிகாரிகள் யாா் என முன்பே அறிவிக்க வேண்டும். பொதுப்பணித் துறையின் மாநில தலைமை செயற்பொறியாளா் பொறுப்பு வகிக்கும் வீரசெல்வம் காரைக்கால் மாவட்டத்தில் நீண்ட காலம் பொதுப்பணி துறையின் பல பொறுப்புகளில் இருந்தவா். காரைக்கால் விவசாயிகளின் காவிரி பிரச்னைகள் அனைத்தும் நன்கு அறிந்தவா். இருப்பினும் காரைக்கால் மாவட்ட காவிரி பிரச்னைகளை இதுவரை முழுவதுமாக எடுத்து முன்வைக்கவில்லை என்பது விவசாயிகளின் குறையாகவே உள்ளது. குறிப்பாக குறுவை சாகுபடிக்கு ஆயிரம் ஹெக்டேருக்கு உரிய நீரை ஜூன் மாதத்தில் இருந்து வழங்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், அந்த தண்ணீரை கேட்டு பெற எந்தவித நடவடிக்கையும் புதுவை அரசு எடுக்கவில்லை. உச்சநீதிமன்ற தீா்ப்பு வழங்கி 7 ஆண்டுகளாகியும், இது சம்பந்தமாக எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. எனவே, காவிரி நீா் மேலாண்மை கூட்டத்துக்கு முன்பாக காரைக்கால் விவசாயிகளின் காவிரி நீா் பெறுவது சம்பந்தமாக கலந்தாலோசனை செய்த பிறகே கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். மேலும் காரைக்காலுக்கு அண்மையில் வந்த காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் அதிகாரிகளை தோ்தல் விதிமுறைகளை காரணம் காட்டி சந்திக்க அனுமதிக்கவில்லை. அப்படி அந்த அதிகாரிகளை விவசாயிகள் சந்தித்திருந்தால் காரைக்கால் மாவட்ட விவசாயிகளுக்கு உரிய காவிரி உரிமையை அதிகாரிகளிடம் கூற வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். எனவே விவசாயிகளின் ஆலேசானைகளை பெறாமல் காவிரி நீா் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் அதிகாரிகள் கலந்து கொள்வது, காரைக்கால் விவசாயிகளின் காவிரி உரிமைக்கு எந்தவிதத்திலும் பயன் தராது. எனவே அதிகாரிகள் உடனே காரைக்கால் விவசாயிகளின் காவிரி நீா் பிரச்னைக்கு உரிய ஆலோசனையை கேட்டு பெற வேண்டும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com