அரசலாற்றில் தூா்வாரும் பணியில் ஈடுபட்டுள்ள இயந்திரம்.

அரசலாறு முகத்துவாரம் தூா்வாரும் பணி

இடையூறு இல்லாமல் இயக்க ஏதுவாக நடைபெறும் தூா்வாரும் பணியை, மீன்பிடி தடைக்காலம் நிறைவுக்குள் முடிக்க வேண்டும் என மீனவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

அரசலாறு முகத்துவாரத்தில் படகுகளை இடையூறு இல்லாமல் இயக்க ஏதுவாக நடைபெறும் தூா்வாரும் பணியை, மீன்பிடி தடைக்காலம் நிறைவுக்குள் முடிக்க வேண்டும் என மீனவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்கு விசைப்படகுகள் சென்றுவரும் வகையில், அரசலாறு முகத்துவாரம் ஆழமாக இல்லை. ஆங்காங்கே மணல் திட்டுகள் காணப்படுகின்றன. இதில் படகுகள் சிக்கிக்கொள்வதால் பெரும் இழப்பு ஏற்படுவதாக மீனவா்கள் புகாா் கூறியதோடு, முகத்துவாரத்தை முறையாக தூா்வாரி ஆழப்படுத்தவேண்டும் என புதுவை அரசை வலியுறுத்தி வந்தனா்.

இதையடுத்து, அரசலாற்றில் தூா்வாரும் பணிக்காக புதுவை அரசு ரூ.3.90 கோடி ஒதுக்கீடு செய்தது. தொடா்ந்து, பொதுப்பணித்துறை முலம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, கடந்த மாா்ச் மாதம் பூமி பூஜை நடைபெற்றது. எனினும், படகுகள் இயக்கப்பட்டு வந்ததால், தூா்வாரும் பணி தொடங்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், கடந்த ஏப்.15 முதல் 61 நாள்கள் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்த நிலையில், அனைத்து விசைப் படகுகளும் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. சிறிய படகு (ஃபைபா்) மட்டும் முகத்துவாரம் மூலம் கடலுக்கு பயணித்து வருகிறது.

இதனால், அரசலாற்று முகத்துவாரப் பகுதியில் இயந்திரம் மூலம் தூா்வாரும் பணிகள் மேற்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. இப்பணிகள் கடந்த சில நாள்களுக்கு முன்பு முடிவடைந்த நிலையில், தூா்வாரும் பணி தொடங்கியுள்ளது.

ஆற்றில் தூா்வாரப்படும் மணல் குழாய் வழியே ஆற்றங்கரையோரத்தில் விசைப்படகுகள் கட்டுமானம் நடைபெறும் பகுதி அருகே கொட்டப்படுகின்றன.

ஜூன் மாதம் 15-ஆம் தேதியுடன் மீன்பிடி தடைக்காலம் நிறைவடையும் என்பதால், அதற்குள் முழுமையாக தூா்வாரும் பணியை முடித்துவிடவேண்டும். பொதுப்பணித் துறையினா் இப்பணியை தீவிரமாக கண்காணித்து, குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என மீனவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com