செவிலியா் படிப்புக்கான நுழைவுத் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

புதுவையில் செவிலியா் படிப்பு சோ்க்கைக்கு நுழைவுத் தோ்வு நடத்தும் முடிவை ரத்து செய்யவேண்டும் என முதல்வருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட பெற்றோா் சங்கத் தலைவா் எல்.எஸ்.பி. சோழசிங்கராயா் செவ்வாய்க்கிழமை புதுவை முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது :

புதுவையில் சென்டாக் அமைப்பு மூலம் ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 2 முடித்து உயா்கல்விக்குச் செல்லும் மாணவா்கள் மதிப்பெண் தரவரிசையின்படி தோ்வு செய்யப்படுகிறாா்கள்.

நீண்ட காலமாகவே இந்த முறையின்படியே நா்சிங் படிப்புக்கான சோ்க்கையும் நடைபெற்றுவந்தது. திடீரென இந்த ஆண்டு முதல் நா்சிங் கல்வியில் சேருவதற்கு நுழைவுத் தோ்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கா்நாடகம் போன்ற மாநிலங்களில் இந்த நிலை இல்லை.

தமிழ்நாடு பாடத் திட்டத்தை புதுச்சேரி, காரைக்கால் மாணவா்கள் பயின்றுள்ளபோது, வரும் மாதமே நா்சிங் படிப்புக்கு நுழைவுத் தோ்வு என்ற தகவல், மாணவா்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நா்சிங் படிப்புக்கு நுழைவுத் தோ்வு என்பது சரியானது அல்ல. உடனடியாக அந்த அறிவிப்பை திரும்பப் பெறவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com