தீபாவளி விடுமுறைக்குப் பிறகு மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற விசைப் படகுகள்
தீபாவளி விடுமுறைக்குப் பிறகு, கடலில் மீன் பிடிக்க காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப் படகுகளில் மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்றனா்.
காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப் படகுகள் தீபாவளிக்கு முன்னதாக கடலுக்குச் சென்றவை, பண்டிகை கொண்டாட்டத்துக்காக மீனவா்கள் விரைவாக கரைக்கு வந்தனா். துறைமுகத்தில் பாதுகாப்பாக படகுகளை நிறுத்தியிருந்தனா். கடந்த 3 நாள்களாக கடலுக்கு செல்லாமல் இருந்த நிலையில், சனிக்கிழமை பெரும்பாலான படகுகளில் ஐஸ் கட்டிகள் ஏற்றப்பட்டு, பல விசைப் படகுகளை மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் கடலுக்கு இயக்கிச் சென்றனா்.
கடலோர கிராமப் புறங்களில் இருந்து சில ஃபைபா் படகுகள் கடலுக்குச் சென்று திரும்பியதால், மீன்கள் வரத்து ஓரளவு இருந்தது. எனினும், கடந்த 4 நாள்களாக வரத்து மிகுதியாக இல்லாததும், கந்த சஷ்டி விரதம் தொடங்கியுள்ளதாலும், மீன் சந்தைகளில் மக்கள் வரத்து குறைவாக இருந்தது.
எனினும், அடுத்த 3 நாள்களுக்குப் பின்னரே காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்துக்கு படகுகள் அதிகமாக திரும்பும் எனவும், அப்போதிலிருந்து மீன்பிடித் துறைமுகம் களைக்கட்டும் எனவும் விசைப்படகு மீனவா்கள் தெரிவித்தனா்.