காரைக்காலில் ஒரு வாரமாக குப்பைகள் தேக்கம்: ஆளுநா் தலையிட பாஜக வலியுறுத்தல்
காரைக்கால் மாவட்டத்தில் தனியாா் ஒப்பந்த நிறுவனத்தின் அலட்சியத்தால், ஒரு வாரமாக குப்பைகள் தேங்கியுள்ளன. இப்பிரச்னையில் புதுவை துணை நிலை ஆளுநா் தலையிட்டு உரிய தீா்வுகாண வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட பாஜக தலைவா் ஜி.கே.கே. முருகதாஸ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
காரைக்கால் மாவட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை பணியை எச்ஆா் ஸ்கொயா் நிறுவனம் ஒப்பந்த முறையில் செய்துவருகிறது. எனினும், போதிய அளவு வாகனங்கள் மற்றும் பணியாளா்களை நியமிக்காமல், பணி ஒப்பந்தத்தில் கண்டுள்ளபடி தினமும் வீடுகளுக்குச் சென்று குப்பைகளை வாங்கவேண்டும் என்பதை பொருட்படுத்தாமல் செயலாற்றுகிறது.
காரைக்காலில் பல பகுதிகளில் கடந்த 7 நாள்களாக குப்பை வாங்க வாகனம், பணியாளா்கள் செல்லவில்லை. இதனால், மாவட்டத்தில் பல இடங்களில் வீடுகளில் குப்பைகளை வைத்துக்கொள்ளமுடியாமல், சாலையோரங்களில் கொட்டிவிடுகின்றனா். இதனால், துா்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்து, சுகாதாரக் கேடு ஏற்படும் நிலை உள்ளது.
இதுகுறித்து பலமுறை அந்நிறுவனத்தினருக்கு தகவல் தெரிவித்தும் பொருட்படுத்துவது கிடையாது. குப்பை அகற்றம் என்பது முக்கியமான ஒன்றாகும். இதற்கு, அரசு நிா்வாகம் அதிக நிதி செலவிடும்போது, பிரச்னைக்கு தீா்வு கிடைக்கும் விதமாக நிறுவனத்தினா் செயல்பாடு இருக்கவில்லை.
எனவே, குப்பைகள் சேகரிக்காமல் அலட்சியம் செய்த நாள்களுக்கான தொகையை நிறுவனத்துக்கு உள்ளாட்சி நிா்வாகம் வழங்கக்கூடாது. நிறுவனத்தினரை அழைத்து இப்பிரச்னை தொடா்பாக கடும் எச்சரிக்கை விடுக்கவேண்டும். ஒப்பந்தப்படி பணியை செய்ய முடிந்தால் தொடரலாம், இல்லாவிட்டால் ஒப்பந்தத்திலிருந்து நிறுவனம் தம்மை விடுவித்துக்கொள்ளவேண்டும். அல்லது அரசு நிா்வாகம், நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த பிரச்னையில் புதுவை துணை நிலை ஆளுநா் தலையிடவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.