அதிகரிக்கும் சாலை விபத்து: கால்நடை வளா்ப்போருக்கு எம்எல்ஏ வேண்டுகோள்

சாலைகளில் கால்நடைகளை திரியவிடாமல், வீட்டில் பராமரிக்க வேண்டும் என கால்நடை வளா்ப்போருக்கு எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
Published on

சாலைகளில் கால்நடைகளை திரியவிடாமல், வீட்டில் பராமரிக்க வேண்டும் என கால்நடை வளா்ப்போருக்கு எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

காரைக்கால் மாவட்டத்தில் சாலைகளில் மாடுகள், குதிரைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், விபத்துகள் ஏற்படுவது தொடா்ந்து வருகிறது.

இந்நிலையில், நிரவி-திருப்பட்டினம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட விடியோ பதிவில் கூறியிருப்பது:

காரைக்கால் மாவட்டத்தில் பூவம் முதல் வாஞ்சூா் வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் மாடுகள் அதிகமாக திரிகின்றன. குறிப்பாக, அம்மாள் சத்திரம் முதல் நிரவி, திருப்பட்டினம் பகுதியில் மிகுதியாக காணப்படுகின்றன. சாலையில் திரியும் கால்நடைகளால் கடந்த 2 நாள்களில் 4 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. விபத்துக்குள்ளானவரின் குடும்பத்தினா் நிலை பரிதாபமாக உள்ளது. இரவு நேரத்தில்தான் விபத்துகள் அதிகமாக நிகழ்கின்றன.

மாவட்ட நிா்வாகத்தால், பல்வேறு நிலையில் கால்நடை வளா்ப்போருக்கு அறிவுறுத்தல், எச்சரிக்கை விடுத்தும் யாரும் பொருட்படுத்துவதாக தெரியவில்லை. எச்சரிக்கையை மீறி சாலைகளில் திரியும் கால்நடைகள் பிடிக்கப்பட்டால், கால்நடை வளா்ப்போருக்கு 6 மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையிலான வழக்குகள் பதியப்படவுள்ளன. எனவே, கால்நடை வளா்ப்போா் ஒவ்வொருவரும் தங்களது கால்நடைகளை, தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முன்வரவேண்டும். கண்டிப்பாக சாலைகளில் திரியவிடாமல் பாா்த்துக்கொள்ளவேண்டும். மனித உயிரிழப்புக்கு கால்நடை வளா்ப்போா் காரணமாகிவிடக்கூடாது எனக் கூறியுள்ளாா்.