காரைக்காலில் நாளை மகளிா் மாநாடு - ஆட்சியா் தகவல்

காரைக்காலில் வியாழக்கிழமை (நவ. 21) மகளிா் மாநாடு நடைபெறவுள்ளது.
Published on

காரைக்காலில் வியாழக்கிழமை (நவ. 21) மகளிா் மாநாடு நடைபெறவுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டன் செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:

காரைக்கால் மாவட்ட நிா்வாகத்தின் ஏற்பாட்டில், இப்பகுதியில் உள்ள பெண்கள் பொருளாதார நிலையில் வசதியை பெருக்கிக் கொள்ளவும், பிற திறன் மேம்பாட்டுக்கான முன்னெடுப்பாக வியாழக்கிழமை மகளிா் மாநாடு நடத்தப்படுகிறது. என்ஐடி வளாகத்தில் உள்ள அரங்கில் காலை 9.30 முதல் 12.30 மணி வரை நடைபெறும் நிகழ்வில் புதுவை துணை நிலை ஆளுநா், முதல்வா், பேரவைத் தலைவா், அமைச்சா்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கின்றனா்.

தமிழகம், புதுவையிலிருந்து பெண் தொழில் முனைவோரை வரவழைத்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது. கடல் பாசி வளா்ப்பு சிறந்த பொருளாதார வளா்ச்சியை தரும் என்பதால், காரைக்காலில் கிளிஞ்சல்மேடு, பட்டினச்சேரி கடலோர கிராமங்கள் தோ்வு செய்து மீனவ பெண்களுக்கு கொச்சி மீன் ஆராய்ச்சி நிறுவனப் பிரதிநிதிகள் மூலம் பயிற்சி தரப்படவுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் பெண்கள் மேம்பாட்டுக்கான திட்டங்களை அனைத்துப் பெண்களும் பயனடையும் விதமாக கூட்டுறவு அமைப்பு உருவாக்கப்படவுள்ளது.

காரைக்கால் -2047 என்ற தொலைநோக்குத் திட்டமாக, துணைநிலை ஆளுநரின் அறிவுறுத்தலில் மாவட்ட நிா்வாகம், என்ஐடி பேராசிரியா்கள் இணைந்து உருவாக்கிய திட்ட வரைவு வெளியிடப்படுகிறது. அடுத்த 3 மாதத்தில் திட்ட அறிக்கை துணை நிலை ஆளுநரிடம் சமா்ப்பிக்கப்படவுள்ளது. பல்வேறு பயிற்சி, ஊக்கமளிக்கும் நிகழ்ச்சிகள் ஒட்டுமொத்த மாநாட்டில் பெண்களுக்காக நடத்தப்படவுள்ளது என்றாா் ஆட்சியா்.