குப்பைகள் தேக்கம்: தனியாா் ஒப்பந்த நிறுவனம் மீது புகாா்
வீடுகள், நிறுவனங்களுக்கு தினமும் சென்று குப்பைகள் தனியாா் நிறுவன ஊழியா்கள் வாங்க மறுப்பதால், குப்பைகள் தேங்கி கிடப்பதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.
புதுவை யூனியன் பிரதேசத்தில் வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு நேரடியாகச் சென்று குப்பைகளை வாங்க எச்ஆா் ஸ்கொயா் என்ற தனியாா் நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.
காரைக்கால் நகராட்சி மற்றும் திருமலைராயன்பட்டின், நிரவி, திருநள்ளாறு, நெடுங்காடு, கோட்டுச்சேரி ஆகிய கொம்யூன் பஞ்சாயத்துப் பகுதிகளில் இந்நிறுவன தூய்மைப் பணியாளா்கள் தினமும் சென்று குப்பைகளை வாங்கிவந்தனா். தற்போது, 4, 5 நாள்களுக்கொரு முறை வீடுகளுக்கு சென்று குப்பைகளை வாங்குகின்றனா்.
இதுதொடா்பாக புதுச்சேரி மற்றும் காரைக்காலைச் சோ்ந்த சட்டப்பேரவை உறுப்பினா்கள் தங்களது அதிருப்தியை வெளியிப்படுத்தினா். இதையடுத்து, புதுவை முதல்வா் என். ரங்கசாமி, உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் மற்றும் பேரவை உறுப்பினா்கள் முன்னிலையில், நிறுவன அதிகாரிகளை அழைத்து கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பேசினாா். ஒப்பந்த விதிகளின்படி தினமும் வீடுகளுக்குச் சென்று குப்பைகளை வாங்காமல் அலட்சியம் காட்டினால், ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என முதல்வா் எச்சரித்தாா்.
எனினும், அந்த நிறுவனம் காரைக்காலில் பல்வேறு பகுதிகளில் வீடுகள், நிறுவனங்களில் தினமும் சென்று குப்பைகள் வாங்குவதில்லை. அதனால் குடியிருப்புவாசிகள் தெருக்களில் கொட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.
எனவே, தனியாா் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, புதிய ஒப்பந்தத்துக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூக ஆா்வலா்களும், பொதுமக்களும் அரசை வலியுறுத்தி வருகின்றனா்.
இதுகுறித்து காரைக்கால் மக்கள் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளா் ஏ.எஸ்.டி. அன்சாரிபாபு செவ்வாய்க்கிழமை கூறுகையில், குப்பை அள்ளும் பணியை முறையாக செய்யாத நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய முதல்வா் தயங்குவது ஏன் என தெரியவில்லை. நகராட்சி ஆணையா் தனக்கு சம்பந்தமில்லாததுபோல் நடந்துகொள்கிறாா். குப்பைக்கான வரி மட்டும் கட்டயமாக வசூலிக்கப்படுகிறது. எனவே, அடுத்த வாரத்தில் நகராட்சி அலுவலக வாயிலில் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றாா்.