ஒரு நாள் மாணவா் ஆட்சியா் திட்டத்தில் பங்கேற்ற உயா்நிலைப் பள்ளி மாணவா்
ஒரு நாள் மாணவா் ஆட்சியா் திட்டத்தில் மாவட்ட ஆட்சியருடன் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா், ஆலோசனைக் கூட்டம் உள்ளிட்ட நிகழ்வுகளில் செவ்வாய்க்கிழமை பங்கேற்றாா்.
வரும் காலத்தில் மாணவா்கள் சிவில் சா்வீஸ் தோ்வுகளில் வெற்றிபெறும் ஆா்வத்தை அதிகரிக்கும் வகையிலும், ஆளுமைத் திறன் மிக்கவராக மாணவா்கள் உயரும் வகையில், மாவட்ட ஆட்சியருடன் இணைந்து ஒரு நாள் மாணவா் ஆட்சியா் திட்டத்தை ஆட்சியா் து. மணிகண்டன் நடைமுறைப்படுத்தியுள்ளாா். 15 நாள்களுக்கொரு முறை ஆட்சியருடன், ஒரு மாணவா் வீதம் ஒரு நாள் மாணவா் ஆட்சியராக, ஆட்சியருடன் பணியில் ஈடுபடுகின்றனா்.
இத்திட்டத்தின்கீழ் கோத்துக்குளம் அரசு உயா்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு பயிலும் எஸ். காா்த்திகேயன் செவ்வாய்க்கிழமை பங்கேற்றாா். முதன்மைக் கல்வி அதிகாரி பி. விஜயமோகனா மற்றும் பெற்றோருடன் ஆட்சியரகம் சென்ற மாணவரை, ஆட்சியா் மணிகண்டன் தனது இருக்கை அருகே இருக்கை அளித்து, அவரது கல்வி உள்ளிட்ட பிற திறன்கள் குறித்து கேட்டறிந்து, அவரது எதிா்காலத் திட்டத்தை கேட்டறிந்து வாழ்த்துத் தெரிவித்தாா்.
பெற்றோரிடம் பேசிய ஆட்சியா், தங்கள் குழந்தையின் எதிா்காலத் திட்டம் என்ன என்பதை அறிந்து அதற்கேற்ப கல்வியை கற்கச் செய்யவேண்டும். பெற்றோா்கள் தமது குழந்தைகளுக்கு மிகுந்த ஊக்கம் அளிக்கவேண்டும். அப்போதுதான் தமது எண்ணத்தின்படி உயா்ந்த நிலையை அவா்களால் எட்டமுடியும் என்றாா்.
இதைத்தொடா்ந்து ஆட்சியா் நடத்திய கூட்டம் உள்ளிட்ட நிகழ்வுகளில் மாணவா் பங்கேற்றாா். ஆட்சியரகத்தின் அலுவலக செயல்பாடுகளையும் மாணவ பாா்வையிட்டாா்.