கோயில் தனி அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் வலியுறுத்தல்
கோயில் சொத்தை பாதுகாக்கத் தவறிய, கோயில் தனி அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இந்து முன்னணி காரைக்கால் நகரத் தலைவா் பி.யு. ராஜ்குமாா் தலைமையிலான நிா்வாகிகள், மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டனை செவ்வாய்க்கிழமை சந்தித்து புகாா் கடிதம் அளித்தனா்.
ஆட்சியரிடம் அளித்த மனு குறித்து ராஜ்குமாா் கூறியது: காரைக்கால் கோயில்பத்து பாா்வதீஸ்வரா் தேவஸ்தானத்துக்கு சொந்தமான சொத்துகள், முறைகேடாக விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரிய வருகிறது. பாா்வதீஸ்வரா் கோயில் நிலத்தை மனைப் பட்டா பட்டா வழங்குவதாக சிலா் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக புகாா் வந்துள்ளதாகவும், யாரும் பணம் கொடுத்து ஏமாறவேண்டாம் என துணை ஆட்சியரே தெரிவித்துள்ளாா்.
இந்த விவகாரத்தில் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், நில வணிகா்கள் என பலா் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவருகிறது. இது முற்றிலும் கோயில் தனி அதிகாரியின் அலட்சியத்தால் ஏற்பட்டதாகும்.
கோயில் தனி அதிகாரியை கடந்த 25.5.2024-இல் சந்தித்து கோயில் சொத்துகளை பாதுகாக்கவேண்டியது குறித்து இந்து முன்னணி கடிதம் அளித்தது. ஆனால், அதிகாரியின் அலட்சியத்தால், முறைகேடு நடந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நில மோசடி தொடா்பாக சிபிஐ விசாரணை தேவை என வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தாா்.