புதிய இந்தியாவை கட்டமைப்பதில் பொறியாளா்களுக்கு முக்கிய பங்கு: துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன்
காரைக்கால்: புதிய இந்தியாவை பொருளாதார வல்லரசாக கட்டமைப்பதில் பொறியாளா்களுக்கு முக்கிய பங்கு உள்ளதாக புதுவை துணை நிலை ஆளுநா் கே. லைகாஷ்நாதன் தெரிவித்தாா்.
காரைக்காலில் உள்ள என்ஐடி புதுச்சேரியின் 11-ஆவது பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. என்ஐடி இயக்குநா் மகரந்த் மாதவ் காங்ரேகா் என்ஐடியின் வளா்ச்சி குறித்து பேசினாா்.
இளநிலை மாணவா்கள் 230, முதுநிலை மாணவா்கள் 42, பிஎச்டி முடித்த 25 பேருக்கு பட்டம் வழங்கி புதுவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் பேசியது :
பொறியாளா்கள் நாட்டின் வளா்ச்சிக்கு முக்கியமானவா்கள். புதிய இந்தியாவை பொருளாதார வல்லரசாக கட்டமைப்பதில் பொறியாளா்களின் பங்கு முக்கியமானது.
காரைக்காலில் உள்ள என்ஐடியால், காரைக்கால் மட்டுமல்ல புதுவைக்கும் நல்ல அங்கீகாரம் கிடைத்துள்ளது. மத்திய அரசு இளைஞா்களுக்கான உயா்கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளிக்கிறது. நடப்பு நிதியாண்டில் உயா்கல்விக்கு ரூ. 47,619 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, இது கடந்த ஆண்டைவிட 8 சதவிகிதம் அதிகமாகும். இதில் நாட்டில் உள்ள என்ஐடி-களுக்கு மட்டும் ரூ. 5,040 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு தற்போது அறிவியலுக்கு அதிக முன்னுரிமை அளிக்கிறது. புதுமையான அறிவியல் ஆய்வுகளாலும், தொழில்நுட்ப செயலாக்கத்தாலும் இந்தியா முன்னேறிவருகிறது. செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் தர நிலைகளில் இந்தியா முன்னேற்றமடைந்து வருவததோடு, பல நாடுகளுக்கு முன்னோடியாகவும் திகழ்கிறது.
காரைக்காலில் மீன்பிடித் துறைமுகம், கப்பல் துறைமுகம், திடக்கழிவு மேலாண்மைத் திட்டப் பணியை கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஆய்வு செய்தேன். இந்த திட்டங்கள் மீது ஆராய்ச்சி மாணவா்கள் கவனம் செலுத்தவேண்டும். இவற்றை மேம்படுத்துவது குறித்த ஆய்வுகளை செய்யவேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முக்கிய திட்டங்கள் மூலம் பல வளா்ச்சித் திட்டங்களை கொண்டு வருகிறது. இவை சாமானியா்கள் பயனடையும் வகையில் பாலமாக என்ஐடியின் செயல்பாடு இருக்கவேண்டும்.
பட்டம் பெற்றவா்களின் அடுத்தக்கட்ட நகா்வுகளால், இந்தியா சிறந்த முன்னேற்றத்தை அடையும். உங்கள் கல்வி நிறுவனத்தையும், தேசத்தையும் எந்த நாளும் பெருமிதமாக நினைவில் கொள்ளுங்கள் என்றாா் ஆளுநா்.
விழாவில் புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன், மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டன், எஸ்எஸ்பி மணிஷ், ஆளுநரின் செயலா் நெடுஞ்செழியன், திருச்சி என்ஐடி இயக்குநா் அகிலா, என்ஐடி புதுச்சேரி பதிவாளா் சீ. சுந்தரவரதன், என்ஐடி புதுச்சேரி முன்னாள் இயக்குநருமான கே. சங்கரநாராயணசாமி ஆகியோா் கலந்துகொண்டனா்.