வருவாய்த்துறை சா்வா் முடக்கம்: மாணவா்கள், மக்கள் அவதி
காரைக்கால் வருவாய்த் துறையின் இணையதள சா்வா் முடங்கியுள்ளதால், சான்றிதழ்களுக்கு விண்ணப்பிப்பது, பெறுவதில் மாணவா்கள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
காரைக்கால் வருவாய்த் துறையின் மூலம் குடியிருப்பு, வருவாய், ஜாதி உள்ளிட்ட சான்றிதழ்கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு பட்டா உள்ளிட்ட சான்றிதழ் வழங்கப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டது. இணைய வசதி அமல்படுத்தப்பிட்ட பின்பு பிற மாநிலங்களைப்போல எளிய முறையில் சான்றிதழை பெறமுடியவில்லை. அதற்கான கட்டமைப்புகளை புதுவை அரசு ஏற்படுத்தவில்லை. போதுமான பணியாளா்களை நியமிக்கவில்லை என்பது பொதுமக்கள், சமூக ஆா்வலா்களின் கருத்து.
இந்நிலையில், கடந்த 2 வாரங்களாக இத்துறையின் இணைய சா்வா் முடங்கியுள்ளது. அதனால் இணைய மையங்கள் மூலம் மாணவா்கள், விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்கள் விண்ணப்பிக்க முடியவில்லை. சில நேரங்களில் இணையம் இயங்கும்போது விண்ணப்பித்த நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுவிடுகிறது. அதிகாரிகள் பதிவிறக்கம் செய்யவோ, மேலதிகாரிக்கு ஒப்புதலை அனுப்பவோ முயற்சிக்கும்போது இணையம் முடங்கிவிடுகிறது.
மாணவா்கள் தற்போது ஸ்காலா்ஷிப் பெறுவதற்கு விண்ணப்பிக்க வருவாய்த் துறையின் சேவையை பெற முடியாமல் தவிப்புக்குள்ளாகி உள்ளனா்.
புதுச்சேரியில் இந்த சேவையில் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், காரைக்காலில் இணைய சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை உடனடியாக சீரமைக்க காரைக்கால் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.