டெங்கு காய்ச்சல்: சுகாதாரத்துறையினா் ஆலோசனை
டெங்கு காய்ச்சல் பரவலை தடுப்பது தொடா்பாக சுகாதாரத்துறையினா் ஆலோசனை மேற்கொண்டனா்.
காரைக்கால் நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் தலைமையில், பருவ மழைக் காலத்தில் டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. தலைமை மருத்துவ அதிகாரி தேனாம்பிகை முன்னிலை வகித்தாா். சுகாதார ஆய்வாளா்கள், சுகாதார உதவியாளா்கள் உள்ளிட்ட களப்பணியாளா்கள் கலந்துகொண்டனா்.
டெங்கு நோய் அறிகுறிகள் குறித்து மக்களுக்கு தீவிரமான விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். நோய் அறிகுறி இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு சுகாதார நிலையத்திலோ அல்லது பொது மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்த வேண்டும். டெங்கு நோய் பரப்பும் ஏடிஸ் கொசு இனப்பெருக்கம் செய்யும் இடங்களை கண்டறிதல், காலி மனைகள், பழைய பொருள்கள் சேகரிக்கும் கடைகள், பள்ளி மற்றும் பொது நிறுவன வளாகங்கள், தொழில் மற்றும் உற்பத்தி தொழிற்சாலை ஆகிய இடங்களில் டெங்கு கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அதனை அகற்ற அந்தந்த பகுதியினருக்கு ஆலோசனை வழங்கவேண்டும் என்றாா் துணை இயக்குநா்.
மழைக்காலத்தில் வயிற்றுப்போக்கு அதிகமாக வர வாய்ப்புள்ளதால், இதனை தடுக்கும் விதத்தில் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.