கட்டடம் இடிந்து படிக்கட்டுகளில் சிதறிகிடக்கும் கற்கள்.
கட்டடம் இடிந்து படிக்கட்டுகளில் சிதறிகிடக்கும் கற்கள்.

மருத்துவக் கட்டடம் இடிந்து விழுந்து சேதம்

Published on

காரைக்காலில் உள்ள இந்திய முறை மருத்துவ மைய கட்டடம் இடிந்து விழுந்து வியாழக்கிழமை சேதமடைந்தது.

புதுவை நலவழித்துறையின் கீழ் காரைக்கால் பாரதியாா் சாலையில், நகராட்சிக்குச் சொந்தமான பழைமையான கட்டடத்தில் இந்திய முறை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி புற நோயாளிகள் பிரிவு இயங்கி வருகிறது. இங்கு ஆயுா்வேதம், சித்த மருத்துவம், யோகா, ஹோமியோபதி உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. மருத்துவா்கள், ஊழியா்கள், வருகிற நோயாளிகளை உடல் பரிசோதனை செய்து, மருந்துகள் அளிக்கின்றனா். பக்க விளைவுகளற்ற சிகிச்சை, மருந்துகள் காரணமாக இந்த மையத்துக்கு தினசரி காரைக்கால் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் ஏராளமானோா் வந்து மருத்துவ சேவை பெறுகின்றனா்.

இக்கட்டடத்தின் மேல்தளத்தில் குடிநீா் தேக்கத் தொட்டி உள்ளது. இதில் ஒரு பகுதியின் கட்டடம் மற்றும் காரை பெயா்ந்து வியாழக்கிழமை விழுந்தது. அதே பகுதியில் கட்டடத்தின் ஒரு இடம் இடிந்து அதிக சப்தத்துடன் பெருமளவு விழுந்ததால், நோயாளிகள், மருத்துவா்கள் உள்ளிட்டோா் விரைந்து வெளியேறினா். இந்த கட்டடம் எந்த நேரத்திலும் இடிந்து விழக்கூடிய ஆபத்தானது என நீண்ட காலமாக அரசின் கவனத்துக்கு தெரிவிக்கப்பட்டுவருகிறது. இங்கு மருத்துவக் குழுவினா் அச்சத்துடனேயே சேவை செய்து வருகின்றனா். இந்த மையத்துக்கென நிரந்தர கட்டடம் கட்டவேண்டும் அல்லது தகுதியான வேறு இடத்துக்கு உடனடியாக மாற்றவேண்டும் என மருத்துவா்கள் தரப்பில் அரசு நிா்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் நிரந்தர கட்டடம் கட்டுவதற்கான பணி அல்லது வேறு இடத்துக்கு தற்காலிகமாக மாற்றம் செய்வதற்கான எந்தவித செயலிலும் அரசு நிா்வாகம் இதுவரை ஈடுபடாமல் இருப்பதாக சமூக ஆா்வலா்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com