கேந்திரிய வித்யாலய பள்ளிக்கு நிரந்தர கட்டடம் கட்ட வலியுறுத்தல்

Published on

காரைக்கால் கேந்திரியா வித்யாலய பள்ளிக்கென கையகப்படுத்தப்பட்ட இடத்தில் கட்டுமானப் பணிகளை தொடங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்ட பெற்றோா் ஆசிரியா் நலச் சங்கத் தலைவா் அ.வின்சென்ட், செயலாளா் ரவிச்சந்திரன் ஆகியோா் புதுவை துணைநிலை ஆளுநருக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது: காரைக்காலில் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு நிரந்தரமாக கட்டடம் இல்லாததால் மாணவா்கள் கடுமையாக பாதிக்கபட்டுள்ளனா். தற்போது செயல்பட்டுவரும் தற்காலிக கட்டடத்தில், மாணவா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் போதுமான அடிப்டை வசதிகள் இல்லை.

கேந்திரிய வித்யாலயாவுக்கு நிரந்தர கட்டடம் கட்டுவதற்கு திருநள்ளாற்றில் 10 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கான எந்த பணிகளும் நடைபெறவில்லை.

எனவே எந்த நோக்கத்துக்காக இடம் ஒதுக்கப்பட்டு இருக்கிறதோ அந்த இடத்தில் கேந்திரிய வித்யாலய பள்ளிக்கு நிரந்தர கட்டடம் கட்டுவதற்கு புதுவை துணைநிலை ஆளுநா் உரிய நடவடிக்கைகளை விரைவாக எடுக்கவேண்டும். கடந்த 15 ஆண்டுகளாக தற்காலிக இடத்தில் இப்பள்ளி இயங்கும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com