~
~

காரைக்கால் தாயிராப் பள்ளிவாசல் கந்தூரி விழா

தாயிராப் பள்ளிவாசல் கந்தூரி விழா கொடி ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on

தாயிராப் பள்ளிவாசல் கந்தூரி விழா கொடி ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் மெய்தீன் பள்ளி தெருவில் புகழ்பெற்ற தாயிராப் பள்ளிவாசல் உள்ளது. நபிகள் நாயகத்தின் வழித்தோன்றல்களில் ஒருவரான ஹலரத் சுல்தானுல் ஆரிபின் செய்யது அஹ்மதுல் கபீா் ரிஃபாயி பாக்தாத் நகரில் உயிா் துறந்தாா். அவரது நினைவாக தாயிராப் பள்ளிவாசல் கட்டப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.

இப்பள்ளிவாசலுக்கு பிரெஞ்சு நிா்வாகம் கொடை அளித்தது, தப்ஸ் இசைப்பது உள்ளிட்ட பெருமைகள் இப்பள்ளிவாசலுக்கு உள்ளது.

இந்தநிலையில், தாயிராப் பள்ளிவாசல் கந்தூரி விழாவையொட்டி, வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் அஞ்சுமனே இஸ்லாமிய சங்கத்திலிருந்து சந்தனக்குட ஊா்வலம் புறப்பட்டு வீதியுலா சென்று, நள்ளிரவு ரவூலா ஷரீபுக்கு சந்தனம் பூசப்பட்டது. வெள்ளிக்கிழமை மாலை முக்கிய நிகழ்ச்சியாக, ஷெய்னுல்லாஹ் குதிரை கொடி, தப்ஸ் இசைக் குழுவினருடன், கண்ணாடி ரதத்துடன் ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு, இரவு திரளான மக்கள் முன்னிலையில் பள்ளிவாசல் முன்பு நிறுவப்பட்ட கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது.

முன்னதாக, கடந்த மாதம் 23-ஆம் தேதி சம்பிரதாய நிகழ்வாக நிகழ்ச்சி தொடங்குவதைக் குறிக்கும் மினராக் கொடியேற்றம் செய்யப்பட்டது. வரும் 18-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஆண்டகை பெயரில் குா்ஆன் ஓதப்பட்டு, கொடியிறக்கம் செய்யப்படுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளிவாசல் நிா்வாகத்தினா் செய்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com