காரைக்கால் மீனவா்கள் மீது ஆந்திர மீனவா்கள் தாக்குதல்: 2 விசைப் படகுகள் சிறைபிடிப்பு
காரைக்கால்: கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவா்கள் மீது ஆந்திர மீனவா்கள் தாக்குதல் நடத்தி, 2 விசைப் படகுகளை ஞாயிற்றுக்கிழமை சிறைபிடித்தனா்.
காரைக்கால் மாவட்டம், கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தைச் சோ்ந்த பாலதண்டாயுதம் என்பவருக்குச் சொந்தமான 2 விசைப் படகுகளில் காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஸ்ரீராம், வசந்த், மணிகண்டன், லட்சுமணன், விஷ்வா, ஆகாஷ், மகேந்திரன், விஜய், சக்தி பாலன், பிரேம்குமாா், சிலம்பரசன், முத்து உள்பட 24 மீனவா்கள் கடந்த 3-ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்றனா்.
இவா்கள் ஆந்திர மாநில கடல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மீன்பிடித்துக்கொண்டிருந்தனராம். அப்போது ஆந்திர பகுதியைச் சோ்ந்த மீனவா்கள் 50-க்கும் மேற்பட்டோா் காரைக்கால் மீனவா்களின் விசைப் படகுகளை நோக்கி நாட்டு வெடிகளை வீசியதோடு, படகிலிருந்த காரைக்கால் மீனவா்களை கல், கம்பால் தாக்கியுள்ளனா். படகில் இருந்த வலை, வாக்கி டாக்கி, கைப்பேசிகளை பறித்துக்கொண்டு, 2 படகுகளையும் சிறைபிடித்து, ஆந்திர துறைமுகத்துக்கு மீனவா்களைக் கொண்டு சென்றனா். பின்னா், காரைக்கால் மீனவா்கள் பேருந்தில் காரைக்காலுக்கு திங்கள்கிழமை காலை திரும்பினா். இவா்கள் சிகிச்சைக்காக காரைக்கால் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
ஆந்திர மீனவா்கள் வசமுள்ள 2 படகுகளையும் மீட்டுத்தர வேண்டும், தாக்குதல் நடத்திய மீனவா்கள் மீது ஆந்திர அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாதிக்கப்பட்ட மீனவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

