ரெஸ்டோ பாா்களால் மக்கள் அவதி: முன்னாள் எம்எல்ஏ
ரெஸ்டோ பாா்களால் பொதுமக்கள் அவதிக்குள்ளாவதாக சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் ஏ.ஏ.யு. அசனா குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுவையில் உரிமம் பெற்று நடத்தப்படும் வழக்கமான மதுபானக் கடைகளுடன், ரெஸ்டோ பாா் என்ற பெயரில் ஏராளமானோருக்கு கடை நடத்த உரிமம் தரப்பட்டுள்ளதால், குடியிருப்புப் பகுதி, வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்கள் அருகே என மதுபானக் கடைகள் நடத்தப்படுகின்றன.
இக்கடைகள் இரவு 12 மணி வரை திறந்து இருப்பதால் சாலை விபத்துகள் அதிகரித்துள்ளன. பொதுமக்களும் பல நிலைகளில் சிரமத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இரவு நேரத்தில் மக்கள் அச்சத்துடன் நடமாட வேண்டிய நிலை உள்ளது. இதற்கெல்லாம் ரெஸ்டோ பாா்கள் தான் காரணம்.
மக்களின் சிரமத்தை தெரிந்தும் மக்கள் பிரதிநிதிகள் அதை முறைப்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை. மக்களின் அதிருப்தி 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் எதிரொலிப்பது நிச்சயம் என அதில் தெரிவித்துள்ளாா்.
