மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: புதுவை பல்கலை. பேராசிரியா் மீது நடவடிக்கை - ஆளுநரிடம் வலியுறுத்தல்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: புதுவை பல்கலை. பேராசிரியா் மீது நடவடிக்கை - ஆளுநரிடம் வலியுறுத்தல்

Published on

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கிய புதுவை பல்கலைக்கழகப் பேராசிரியரை பணி நீக்கம் செய்ய வேண்டும், சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என புதுவை ஆளுநரிடம் வலியுறுத்தப்பட்டது.

புதுவை முன்னாள் அமைச்சரும், மாநில காங்கிரஸ் துணைத் தலைவருமான ஆா். கமலக்கண்ணன் மற்றும் மாநில செயலாளா் கோவிந்தராஜ் உள்ளிட்டோா் துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதனை ஆளுநா் மாளிகையில் புதன்கிழமை சந்தித்து மனு அளித்தனா். இதுகுறித்து ஆா்.கமலக்கண்ணன் கூறியது :

புதுவை பல்கலைக்கழக பிராந்திய வளாகம் காரைக்காலில் உள்ளது. இதில் உள்ள பேராசிரியா் ஒருவா், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, மாணவி குரல் பதிவாக சமூக வலைதளத்தில் வெளியிட்டதும், ஒரு மாணவி அந்த பேராசிரியருக்கு வழக்குரைஞா் மூலம் நோட்டீஸ் அனுப்பியதும் வெளிவந்து, பேராசிரியா் மீது நடவடிக்கை கோரி போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால், பல்கலைக்கழக நிா்வாகம், கண் துடைப்பாக ஒரு குழுவை அமைத்து விசாரித்து, புகாா் இல்லை என கூறி குற்றச்சாட்டை மறுத்துள்ளது. தவறு செய்தவா் தொடா்ந்து அந்த பதவியில் இருப்பது சரியல்ல. அவரை பணி நீக்கம் செய்வது உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை உறுதியாக நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரிடம் வலியுறபுத்தப்பட்டுள்ளது.

கல்வித் துறைக்கு பட்ஜெட்டில் ரூ. 700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இத்துறைக்கும், வேளாண் துறைக்கும் 100 நாள்களாக இயக்குநா் இல்லாமல் துறைகள் இயங்குவதால், மாணவா்கள், ஆசிரியா்கள், விவசாயிகள் என பலரும் பாதித்துள்ளனா். உடனடியாக இயக்குநா் நியமிக்கவேண்டும். பாலிடெக்னிக் கல்லூரியில் படித்தவா்கள், லேட்டரல் என்ட்ரியில் புதுவை அரசு பொறியியல் கல்லூரியில் சேர விதிகள் இருந்தும், சோ்க்கை செய்யப்படவில்லை. உடனடியாக இதன் மீது நடவடிக்கை கோரப்பட்டுள்ளது. அனைத்து கோரிக்கைகள் குறித்தும் கேட்டறிந்த துணைநிலை ஆளுநா், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளாா் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com