‘புதுவையில் பாசிக் நிறுவனம் மூடப்படுவதை தவிா்த்திருக்கலாம்’

Published on

புதுவையில் பாசிக் என்கிற வேளாண் சாா்ந்த அரசு நிறுவனம் மூடப்படுவதை தவிா்த்திருக்கலாம் என காங்கிரஸ் கூறியுள்ளது.

இதுகுறித்து புதுவை முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மாநில துணைத் தலைவருமான ஆா்.கமலக்கண்ணன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை :

புதுவையில் விவசாயிகளுக்கு உதவும் விதமாக பாசிக் என்கிற புதுச்சேரி அக்ரோ சா்வீஸ் மற்றும் இண்டஸ்ட்ரீஸ் காா்ப்பரேஷன் 1986-87 -ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் மூடப்படுவதாக அதிகாரப்பூா்வமாக புதுவை அரசு கடந்த சில நாள்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டது வருத்தமளிக்கிறது.

புதுவையில் மிகச் சிறந்த பொதுத்துறை நிறுவனமான இதன் தலைவராக 6 ஆண்டுகள் நான் பணியாற்றியுள்ளேன். நிறுவனம் வளரவும், நல்ல முறையில் லாபமீட்டும் வகையிலும், அறிவாா்ந்த மேலாண் இயக்குநா்கள் ஒத்துழைப்போடு சிறப்பாகப் பணியாற்றியுள்ளேன். புதுவையில் பெயா் பெற்ற நிறுவனமாக பாசிக் திகழ்ந்தது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.

பிற்காலத்தில் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி தேவைக்கு மிகுதியான நபா்களை நிறுவனத்தில் பணியமா்த்தும் செயல்பாட்டை செய்ததன் விளைவாக, நிறுவனம் நலிந்துபோய் மூடப்படும் நிலைக்கு வந்துவிட்டது.

புதுவையில் தனியாா் நிறுவனத்துக்கு குப்பை அகற்றத்துக்காக கோடிக்கணக்கான ரூபாய் அளிக்கப்படுகிறது. இதில் சொற்பத் தொகையை நிறுவன வளா்ச்சிக்கு ஒதுக்கி, தகுதியான அதிகாரியை மேலாண் இயக்குநராக நியமித்திருந்தால், நிறுவனம் மூடும் நிலை வந்திருக்காது. ஊழியா்கள் பாதிக்கும் நிலை வந்திருக்காது. ஆனால் ஆட்சியாளா்களுக்கு அதற்கான மனம் இல்லை.

நிறுவனத்தில் ஏறக்குறைய 400 ஊழியா்கள் பல மாதங்களாக ஊதியமின்றி தவிக்கின்றனா். நிறுவனம் மூடப்பட்டுவிட்டதாகக் கூறிய நிலையில், ஊழியா்களுக்கு உரிய செட்டில்மெண்ட் செய்துவிடவேண்டும். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஓரிரு நாள்களே உள்ள நிலையில், 4, 5 மாத ஊதியத்தையாவது தற்போது தரவேண்டும். இந்த பணியாளா்களை வேறு துறைகளில் பணியமா்த்தவேண்டும். ஊழியா்களின் தவிப்பை புதுவை அரசு உணா்ந்து செயல்படவேண்டும். இந்த விவகாரத்தில் துணை நிலை ஆளுநரும், முதல்வரும் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும்.

X
Dinamani
www.dinamani.com