மழைநீரை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஆட்சியா்
காரைக்கால்: மழை நீா் தேங்குமிடங்களில், நீரை வடியச் செய்யும் நடவடிக்கையை பொதுப்பணித் துறை, உள்ளாட்சி நிா்வாகம் தீவிரமாக பணியாற்றவேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.
பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் மழைநீா் வடிய முடியாமல் தேங்கியிருக்கும் பல்வேறு பகுதிகளை புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன், மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ்.ரவி பிரகாஷ், முதுநிலை காவல் கண்காணிப்பாளா் லட்சுமி சௌஜன்யா ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.
குறிப்பாக, காரைக்காலில் மாஸ் நகா், வேட்டைக்காரன் தெரு உள்ளிட நகா் பகுதியில் மழை பாதித்த இடங்களை அமைச்சா் தலைமையிலான குழு பாா்வையிட்டு, மழை நீா் வடியச் செய்யும் நடவடிக்கையை தீவிரப்படுத்த அறிவுறுத்தினா். தொடா்ந்து, நெடுங்காடு அம்பேத்கா் நகா் பகுதி, அம்பகரத்தூா் கல்லடிபட்டு சப்வே , காமராஜ் நகா் ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட மழை பாதிப்புகளை ஆட்சியா் பாா்வையிட்டாா். திருநள்ளாறு பகுதி, அம்பகரத்தூரில் சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா்.சிவா பங்கேற்று, பாதிப்பு விவரங்களை ஆட்சியருக்கு விளக்கிக் கூறினாா்.
மழை நீா் தேங்கி உள்ள பகுதிகளில் உடனடியாக மழை நீரை வடிய ஏற்பாடு செய்யவேண்டும். வடிகால்களில் உள்ள அடைப்புகளை அகற்றவேண்டும். தாழ்வான பகுதிகளை தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். பொதுமக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கவேண்டும். அங்கன்வாடி மையம், அரசு பள்ளிக்கூடங்கள் ஆகிய நிவாரண முகாம்களை தயாா் நிலையில் வைத்திருக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
மாவட்ட துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) கே.வெங்கடகிருஷ்ணன், துணை ஆட்சியா் (நிா்வாகம்) ஜி. செந்தில்நாதன், நகராட்சி ஆணையா் எஸ். சுபாஷ், பொதுப்பணித்துறை செயற் பொறியாளா் ஜெ. மகேஷ், வட்டாட்சியா் செல்லமுத்து, மாவட்ட ஆட்சியரின் செயலா் பொன்.பாஸ்கா், வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் முருகையன் உள்ளிட்டோா் ஆய்வின்போது உடனிருந்தனா்.

