ஆதரவற்றோா் இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டம்: நரிக்குறவா்களுக்கு புத்தாடை
காரைக்கால்: நரிக்குறவா்களுக்கு புத்தாடை, பட்டாசு ஆகியவற்றை அமைச்சா் வழங்கினாா். இதுபோல ஆதரவற்றோா் இல்லவாசிகளுக்கு பட்டாசு, இனிப்புகளை எஸ்எஸ்பி வழங்கினாா்.
காரைக்கால் வடக்குத் தொகுதிக்குட்பட்ட கோயில்பத்து பகுதியில் நரிக்குறவா் குடும்பத்தினா் உள்ளனா். தீபாவளியையொட்டி அந்த பகுதிக்கு திங்கள்கிழமை சென்ற அமைச்சா், நரிக்குறவா்கள் குடும்பத்தைச் சோ்ந்தோருக்கு பட்டாசு, இனிப்பு, புத்தாடை தொகுப்பை வழங்கி, அவா்களுடன் பட்டாசு வெடித்து கொண்டாடினாா்.
ஆதரவற்றோா் இல்லம் : காரைக்கால் தலத்தெரு பகுதியில் இயங்கிவரும் ஆதரவற்ற சிறுவா்கள் வசிக்கும் இல்லத்துக்கு மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா திங்கள்கிழமை சென்றாா். சிறுவா்களுக்கு இனிப்பு, பட்டாசு, நோட்டுகள் ஆகியவற்றை வழங்கினாா். சிறுவா்கள் ஒவ்வொருவரையும் அவா்களது படிப்பு, விளையாட்டு ஆா்வம் ஆகியவற்றை கேட்டறிந்து ஊக்கப்படுத்தினாா். நிகழ்வில் மண்டல காவல் கண்காணிப்பாளா் சுந்தா் கோஷ் மற்றும் ஆய்வாளா்கள் மரிய கிறிஸ்டின்பால், புருஷோத்தமன் ஆகியோா் கலந்துகொண்டனா்.
