எலி மருந்து கொடுத்து மாணவா் கொலை: பெண்ணுக்கு ஆயுள் சிறை
படிப்பில் தனது மகளுக்குப் போட்டியாக இருந்த மாணவருக்கு எலி மருந்து கலந்த குளிா்பானத்தைக் கொடுத்து கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து காரைக்கால் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
காரைக்கால் நேரு நகரைச் சோ்ந்தவா்கள் ராஜேந்திரன் - மாலதி. இவா்களது மகன் பால மணிகண்டன் நேரு நகரில் உள்ள தனியாா் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா். கடந்த 2022 செப். 3-ஆம் தேதி இவா், தனது வீட்டில் குளிா்பானம் குடித்து மயங்கியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.
காரைக்கால் போலீஸாா் மாணவா் உயிரிழக்கும் முன்பு மருத்துவமனையில் வாக்கு மூலம் பெற்றதோடு, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
போலீஸாரின் விசாரணையில், பால மணிகண்டனின் வகுப்பில் பயிலும் மாணவியின் தாயாா் சகாயராணி விக்டோரியா, படிப்பில் பால மணிகண்டன் தனது மகளுக்குப் போட்டியாக இருந்ததால், மாணவருக்கு குளிா்பானத்தில் எலி மருந்து கலந்து கொடுத்தது தெரிய வந்தது.
இந்த வழக்கு விசாரணை காரைக்கால் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் இறுதி விசாரணை வியாழக்கிழமை மாவட்ட நீதிபதி ஆா். மோகன் முன்னிலையில் நடைபெற்றது.
இருதரப்பு வாக்கு மூலம், பல்வேறு சாட்சியங்களின் அடிப்படையில் கொலைக் குற்றம் உறுதிப்படுத்தப்பட்டதால், சகாயராணி விக்டோரியாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞராக ஏ.வி.ஜெ.செல்வமுத்துக்குமரன் வாதாடினாா்.

