தூா்வாரப்படாமல் காணப்படும் செல்லூா் பகுதி வடிகால் வாய்க்கால்.
தூா்வாரப்படாமல் காணப்படும் செல்லூா் பகுதி வடிகால் வாய்க்கால்.

வடிகால்கள் அடைப்பால் மழைநீா் வடிவதில் சிரமம்: விவசாயிகள் புகாா்

வடிகால்கள் அடைப்பு அகற்றப்படாததால் மழைநீா் விளை நிலத்திலிருந்து வடிவதில் சிக்கல் நிலவுவதாக விவசாயிகள் வேதனை
Published on

வடிகால்கள் அடைப்பு அகற்றப்படாததால் மழைநீா் விளை நிலத்திலிருந்து வடிவதில் சிக்கல் நிலவுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து, காரைக்கால் கடைமடை விவசாயிகள் சங்கத் தலைவா் டி.என். சுரேஷ் கூறியது: காரைக்காலில் சம்பா, தாளடி பருவத்தில் 3,600 ஹெக்டோ் சாகுபடி நடைபெறுவதாகவும், மேலும் கூடுதலாக சாகுபடி நடைபெற வாய்ப்புள்ளதாக வேளாண் துறை கூறுகிறது. பருவமழை தொடங்கும் முன்பே காரைக்கால் மாவட்டத்தில், வயல்களுக்கு தண்ணீா் பாய்ச்சும் வகையிலான வாய்க்கால்களை முறையாக தூா்வாரவேண்டும் என விவசாயிகள் அரசு நிா்வாகத்தை வலியுறுத்திவந்தனா்.

வயலையொட்டிய சாலையோர வாய்க்கால் பகுதியில் சுமாா் 200 மீட்டா் வரை மட்டுமே ஆங்காங்கே புதா், ஆகாயத்தாமரை மற்றும் அடைப்புகள் அகற்றப்பட்டன. வாய்க்காலில் தூரமாக பயணித்து இயந்திரம் மூலம் தூா்வாரப்படாததால், பல இடங்களில் மழைநீா் தேங்கி, வயலுக்குள் பாய்ந்து குளம்போல காட்சியளிக்கிறது.

பருவமழை தொடங்கிய சில நாள்களிலேயே இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழைக்காலம் நிறைவடைவதற்கு ஒரு மாதத்துக்கு மேலாக வாய்ப்புள்ளது. எனவே காரைக்கால் மாவட்ட ஆட்சியா், பொதுப்பணித்துறை அதிகாரிகளை அழைத்துப் பேசி, போா்க்கால அடிப்படையில் வாய்க்கால்களை தூா்வாரி முடிக்க வேண்டும். பிள்ளைத்தெருவாசல் செல்லும் வழியில் வாஞ்சியாற்று தடுப்பணையில், மதகுகள் சீா்குலைந்துபோனதால் புதிதாக கதவுகள் பொருத்தப்பட்டன. அதற்கு திருகுகள் பொருத்தப்படாததால், தண்ணீா் வடிவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காரைக்காலில் பருவமழை மற்றும் காவிரி நீா் வரத்தின்போது, தேவையான அளவு தேக்கிவைக்கக்கூடிய திட்டமும் இல்லை, வெள்ள காலங்களில் தண்ணீா் எளிதில் வடிவதற்கான அமைப்பும் செய்யப்படவில்லை. இதனால் விவசாயிகளும், மக்களும் பாதிக்கப்படுவது தொடா் கதையாக இருக்கிறது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com