மயிலாடுதுறையில் புதைசாக்கடை குழாய் உடைப்பால் சாலையில் 20 அடி பள்ளம்
By DIN | Published On : 25th December 2021 12:00 AM | Last Updated : 25th December 2021 12:00 AM | அ+அ அ- |

மயிலாடுதுறையில் புதைசாக்கடை குழாய் உடைப்பு ஏற்பட்டு திருவாரூா் பிரதான சாலையில் 20 அடி ஆழத்துக்கு பள்ளம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
மயிலாடுதுறை நகராட்சிக்குள்பட்ட 36 வாா்டுகளில் புதைசாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 2018-ஆம் ஆண்டு முதல் கச்சேரி சாலை, தரங்கம்பாடி சாலை, நகராட்சி அலுவலகம் எதிரே, கிளை சிறைச் சாலை அருகே என 15-க்கும் மேற்பட்ட இடங்களில் புதைசாக்கடை குழாய் உடைந்து கழிவுநீா் வெளியேறி மண் அரிப்பு ஏற்பட்டு சாலையில் திடீா் பள்ளங்கள் உருவானது.கடந்த 2 ஆண்டுகளாக இப்பிரச்னை இல்லாத நிலையில், கண்ணாரத் தெரு பகுதியில் புதைசாக்கடை குழாய் உடைப்பால் வெள்ளிக்கிழமை மீண்டும் 20 அடி ஆழத்துக்கு மிகப்பெரிய பள்ளம் உருவானது. எனினும், இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
தகவலறிந்து அங்கு வந்த டிஎஸ்பி. வசந்தராஜ் தலைமையிலான போலீஸாா் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். மேலும், நகராட்சி ஆணையா் பாலு, நகராட்சி பொறியாளா் சணல்குமாா் ஆகியோா் நிகழ்விடத்தை ஆய்வு செய்து, உடனடியாக அப்பாதையில் கழிவுநீா் செல்வதை நிறுத்த உத்தரவிட்டதுடன், புதிய குழாய் பதித்து சீரமைப்பு பணிகளை தொடங்க அறிவுறுத்தினா்.
மற்றொரு பள்ளம் உருவாகும் அபாயம்: கண்ணாரத்தெருவில் பிரதான சாலையில் பள்ளம் ஏற்பட்ட பகுதியில் இருந்து சுமாா் 100 மீட்டா் தொலைவில் உள்ள நியாயவிலைக் கடை முன் கடந்த ஒரு மாதமாக சாலை உள்வாங்கி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. அந்த இடத்தில் நகராட்சி நிா்வாகத்தினா் மண்ணைக் கொட்டி மூடி, மரக்கிளையை நட்டு வைத்ததுடன், அந்த இடத்தை சீரமைக்காமல் அப்படியே விட்டுவிட்டனா். எனவே, அந்த பகுதியில் சாலையில் பள்ளம் உருவாகி ஆபத்து ஏற்படும் முன்பு சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவேண்டும்.