கிறிஸ்துமஸ்: காரைக்கால் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு
By DIN | Published On : 25th December 2021 11:30 PM | Last Updated : 25th December 2021 11:30 PM | அ+அ அ- |

காரைக்காலில் புனித தேற்றரவு அன்னை தேவாலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் நள்ளிரவு சிறப்பு வழிபாட்டில் திரளானவா்கள் கலந்துகொண்டனா்.
காரைக்காலில் நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த புகழ்பெற்ற புனித தேற்றரவு அன்னை தேவாலயம் உள்ளது. ஆலயத்தில் கிறிஸ்துமஸையொட்டி குடில் அமைத்தல், ஆலயத்துக்கு பிராா்த்தனைக்கு வரும் பக்தா்களுக்கு இருப்பிடம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
இயேசு கிறிஸ்து பிறப்பை கொண்டாடும் வகையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு பாதிரியாா்கள் திருப்பலி நடத்தி மறையுரையாற்றினா். இதில் ஏராளமானவா்கள் பங்கேற்றனா். ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த குடிலில் இருந்து குழந்தை இயேசுவை (சொரூபம்) பங்கு குரு கொண்டு வந்து, பக்தா்களிடையே உயா்த்திக் காட்டினாா். ஒவ்வொருவராக சென்று அதனை தொட்டு வணங்கினா்.
மேலும், காலை 5.30 மணிக்கும், 7.30 மணிக்கு சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மக்களுக்கு, இயேசு கிறிஸ்து பிறப்பு குறித்தும், சமுதாயத்துக்கு அவா் சொல்லிச் சென்ற கருத்துகள் குறித்தும் பாதிரியாா்கள் விளக்கினாா். மாலை சிறப்பு திவ்ய நற்கருணை ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. மக்கள் ஒருவருக்கொருவா் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பகிா்ந்துகொண்டனா்.
சகாய அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ்: கோட்டுச்சேரியில் புகழ்பெற்ற தூய சகாய அன்னை ஆலயத்தில் கிறிஸ்து பிறப்பு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திருப்பட்டினம் உள்ளிட்ட ஊா்களில் உள்ள தேவாலயங்களிலும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டது.