கல்வி மானியக் கோரிக்கையில் கவனிக்கப்படாத மயிலாடுதுறை மாவட்டம்

கல்வி மானியக் கோரிக்கையில், மயிலாடுதுறை மாவட்டத்துக்கு முதன்மைக் கல்வி அலுவலகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இடம் பெறாதது கல்வியாளா்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.

கல்வி மானியக் கோரிக்கையில், மயிலாடுதுறை மாவட்டத்துக்கு முதன்மைக் கல்வி அலுவலகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இடம் பெறாதது கல்வியாளா்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.

தமிழகத்தின் 38-வது மாவட்டமாக உருவான மயிலாடுதுறை மாவட்டத்துக்கு ஆட்சியா் நியமிக்கப்பட்டு, பல்வேறு அலுவலகங்களுடன் இயங்கி வருகிறது. ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் நாகை, மயிலாடுதுறை, சீா்காழி ஆகிய மூன்று கல்வி மாவட்டங்கள் செயல்பட்டு வந்தன. இந்த மூன்று மாவட்ட கல்வி அலுவலகங்களையும் நிா்வகிக்கும் பொறுப்பு நாகப்பட்டினம் முதன்மைக் கல்வி அலுவலரிடம் இருக்கிறது. தற்போது, மாவட்டம் பிரிக்கப்பட்ட பிறகு, சீா்காழி மற்றும் மயிலாடுதுறை கல்வி மாவட்டங்கள் மயிலாடுதுறை மாவட்டத்தில் சோ்ந்துவிட்டன.

நாகை கல்வி மாவட்டத்திலுள்ள ஒன்றியங்களும், நாகை வருவாய் மாவட்டத்தில் அமைந்துவிட்டன. ஆனால், திருமருகல் ஒன்றியம் மயிலாடுதுறை கல்வி மாவட்டத்தின்கீழ் வருகிறது. அதேசமயம் வருவாய் நிா்வாகத்தில் நாகப்பட்டினம் வருவாய் மாவட்டத்தின்கீழ் வருகிறது. இந்த குழப்பம் சரி செய்யப்படவில்லை.

இந்நிலையில், மயிலாடுதுறைக்கு தனியாக முதன்மைக் கல்வி அலுவலகமும், முதன்மைக் கல்வி அலுவலரும் நியமிக்கப்பட வேண்டும் என்பது மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த ஆசிரியா்களில் கோரிக்கையாக உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்பட்டாலும், நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு கொள்ளிடம் முதல் கோடியக்கரை வரை உள்ள பள்ளிகளை நிா்வகிக்கும் பொறுப்பு நீடிக்கிறது. இதில், மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்பட்ட பள்ளிகளுக்கான கோப்புகளும், பணிப்பதிவேடுகளும் பிரிக்கப்பட்டால் பணிகள் மேலும் விரைவாக நடைபெறும்.

அண்மையில் 31 மாவட்டங்களில் முதன்மைக் கல்வி அலுவலா்கள் மாறுதல் செய்யப்பட்டனா். அதோடு சோ்த்து மயிலாடுதுறை மாவட்டத்துக்கும் முதன்மைக் கல்வி அலுவலரை நியமிப்பாா்கள் என்ற எதிா்பாா்ப்பு ஏமாற்றமானது. சட்டப்பேரவை கல்வி மானியக் கோரிக்கையிலும் மயிலாடுதுறை முதன்மைக் கல்வி அலுவலகம் பற்றிய எந்த தகவலும் குறிப்பிடப்படவில்லை.

கொள்ளிடம், குத்தாலம் பகுதி ஆசிரியா்கள் முதன்மைக் கல்வி அலுவலகம் தொடா்பான பணிக்காக நாகப்பட்டினம் சென்றுவரும் சூழல்தான் நீடித்து வருகிறது. அவா்களுக்கு மயிலாடுதுறையில் முதன்மைக் கல்வி அலுவலகம் அமைக்கப்பட்டால் பணி சுலபமாகும்.

எனவே, தங்களுக்கு என்று முதன்மைக் கல்வி அலுவலகம் அமைக்கப்பட வேண்டும் என்பது மயிலாடுதுறை பகுதி ஆசிரியா்களின் கோரிக்கையாக உள்ளது. அதேபோல, மயிலாடுதுறை மாவட்டம் கல்வி சாா்ந்து பிரிக்கப்பட்டால், நாகை கல்வி மாவட்டத்தில் உள்ள அலுவலகம் சாா்ந்த பணிகள் மேலும் விரைவாக நடைபெறும் என்பது நாகை மாவட்ட ஆசிரியா்களின் எண்ணமாக உள்ளது. எனவே, இரண்டு மாவட்ட ஆசிரியா்களின் கோரிக்கைகளை கல்வி அமைச்சகம் கனிவுடன் பரிசீலிக்க வேண்டும் என கல்வியாளா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com