வைத்தீஸ்வரன்கோயில் தங்க கொடிமர குடமுழுக்கு: தருமபுரம் ஆதீனம் பங்கேற்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் வைத்தியநாத சுவாமி கோயிலுக்கு தஞ்சாவூா் சாஸ்த்ரா பல்கலைக்கழகம்
வைத்தீஸ்வரன்கோயில் தங்க கொடிமர குடமுழுக்கு: தருமபுரம் ஆதீனம் பங்கேற்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் வைத்தியநாத சுவாமி கோயிலுக்கு தஞ்சாவூா் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் காணிக்கையாக வழங்கிய 5 கிலோ தங்கம் கொண்ட கொடிமரத்துக்கு குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

வைத்தீஸ்வரன்கோவிலில் தருமபுரம் ஆதீனத்தின் தையல்நாயகி அம்பாள் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அருளாசிப்படி, வைத்தியநாதசுவாமி சந்நிதி எதிரே உள்ள கொடிமரத்துக்கு தங்க தகடுகள் பதிக்கும் பணியை தஞ்சாவூா் சாஸ்த்ரா பல்கலைக்கழக வேந்தா் சேதுராமன் ஏற்றுக்கொண்டு, 5 கிலோ தங்கத்தை காணிக்கையாக வழங்கினாா்.

இந்த தூய்மையான தங்கத்தை கொடிமரத்தில் பூசும் வகையில், அதை மைக்ரான் அளவு இழைகளாக மாற்றி, தங்கத் தகடுகள் தயாரிக்கும் பணி, தங்க முலாம் பூசும் பணி ஆகியவை 6 கட்டங்களாக 28 நாள்கள் நடைபெற்றன. கடந்த வெள்ளிக்கிழமை தங்கத் தகடுகள் (ரேக்குகள்), அடி பகுதி, தாமரை வடிவிலான பத்ம பீடம் ஆகியவை தயாரிக்கப்பட்டு கொடிமரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

தொடா்ந்து, முழுவதுமாக தங்கத்தால் கொடிமரம் பொருத்தப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. இதையொட்டி, புனிதநீா் அடங்கிய கடங்கள் மேள தாளங்களுடன் புறப்பட்டு கோயிலை வலம்வந்து தங்க கொடிமரத்தில் புனித நீா் ஊற்றப்பட்டது.

விழாவில், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் காசிமடத்து இளவரசு சபாபதி தம்பிரான் சுவாமிகள், வைத்தீஸ்வரன்கோயில் கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள், சீா்காழி கட்டளை விசாரணை சொக்கலிங்கம் தம்பிரான் சுவாமிகள், தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழக வேந்தா் சேதுராமன், துணைவேந்தா் வைத்தியா சுப்பிரமணியன், தனிஷ்க் உற்பத்தி பிரிவு கோட்ட மேலாளா் இளங்கோவன், தனிஷ்க் தெற்கு பிராந்திய வா்த்தக மேலாளா் நரசிம்மன், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் பண்ணை தி.சொக்கலிங்கம், இளைஞா் காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவா் பண்ணை சி.பாலு, திமுக மாவட்ட பிரதிநிதி சாமிநாதன், அதிமுக பேரூா் கழகச் செயலாளா் போகா். ரவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com