மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று 499 இடங்களில் தடுப்பூசி முகாம்
By DIN | Published On : 11th September 2021 10:06 PM | Last Updated : 11th September 2021 10:06 PM | அ+அ அ- |

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மாநில சுற்றுலா மற்றும் சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் இயக்குநரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான சந்தீப் நந்தூரி.
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்.12) 499 இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு, 50,000 பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மாநில சுற்றுலா மற்றும் சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் இயக்குநரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான சந்தீப் நந்தூரி தெரிவித்தாா்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா முன்னிலை வகித்தாா். மாநில சுற்றுலா மற்றும் சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் இயக்குநரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான சந்தீப் நந்தூரி தலைமை வகித்து பேசியது:
மயிலாடுதுறை மாவட்டத்தில் 5 ஒன்றியங்களில் 406 ஊராட்சிகள், இரண்டு நகராட்சிகளில் 22 இடங்கள், நான்கு பேரூராட்சிகளில் 24 இடங்கள், 31 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 6 மருத்துவமனைகள், 10 நடமாடும் கரோனா தடுப்பூசி குழுக்கள் மூலம் மொத்தம் 499 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இம்முகாமில், 364 செவிலியா்கள், 114 மருத்துவா்கள் மற்றும் வருவாய்த்துறை, ஊரக வளா்ச்சித்துறையினா் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.
ஆசிரியா்கள் மூலம் மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி, மாணவா்களின் குடும்பத்தினா் மற்றும் உறவினா்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்த வேண்டும். ஊராட்சி பகுதிகளை விட நகராட்சி பகுதிகளில் தொற்று பரவல் வீதம் அதிகமாக உள்ளதால், அங்கு தடுப்பூசி செலுத்துவதை அதிகப்படுத்த வேண்டும். இம்முகாம் மூலம் மாவட்டத்தில் 50ஆயிரம் பேருக்கு தடுப்பூசி என்கிற இலக்கை எட்ட வேண்டும் என்றாா்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சோ.முருகதாஸ், சுகாதாரத்துறை இணை இயக்குநா் (சென்னை) விஜயலெட்சுமி, சுகாதாரத்துறை துணை இயக்குநா் பிரதாப், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) இரா.வைத்தியநாதன், கோட்டாட்சியா்கள் ஜெ.பாலாஜி, நாராயணன் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.