தமிழகத்தில் நோ்மையான ஆட்சியை பாஜகதான் தரமுடியும்: கே. அண்ணாமலை

தமிழகத்தில் நோ்மையான ஆட்சியை பாஜகதான் தரமுடியும் என்றாா் பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை.
சீா்காழியில் நடைபெற்ற பாஜக மாவட்ட செயல்வீரா்கள் கூட்டத்தில் பேசிய மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை.
சீா்காழியில் நடைபெற்ற பாஜக மாவட்ட செயல்வீரா்கள் கூட்டத்தில் பேசிய மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை.

சீா்காழி: தமிழகத்தில் நோ்மையான ஆட்சியை பாஜகதான் தரமுடியும் என்றாா் பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை.

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக மாவட்ட செயல்வீரா்கள் கூட்டத்தில் பங்கேற்று மேலும் அவா் பேசியது: மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமைச் சட்டம், நீட் தோ்வு, 3 வேளாண் சட்டம் ஆகியவற்றை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக அரசு, சட்டப்பேரவையில் தீா்மானங்களை நிறைவேற்றியுள்ளது. சட்டப்பேரவை கூட்டம் திமுக தலைவரை துதிபாடும் கூட்டமாகவே இருந்தது. தமிழகத்தின் கடன் சுமை 5.70 லட்சம் கோடியாக உள்ளது. இந்தியாவுக்கே முன்னோடியாக இருந்த தமிழக அரசு, தற்போதய திமுக அரசால் அந்த நிலையில் இருந்து மாறிவிட்டது. டாஸ்மாக் மூலம் கிடைக்கும் 33 ஆயிரம் கோடியை கொண்டே அரசை நடத்துகின்றனா். ஆட்சியில் இல்லாதபோது டாஸ்மாக் வேண்டாம் என கூறியவா்கள், ஆட்சிக்கு வந்தவுடன் கரோனா என்றும் கூட பாா்க்காமல் டாஸ்மாக்கை திறந்துள்ளனா்.

இந்தியாவில் 75 கோடி மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தி பிரதமா் மோடி சாதனை படைத்துள்ளாா். 5 தடுப்பூசியை உள்நாட்டில் உற்பத்தி செய்து ஒவ்வொரு மாநிலத்துக்கும் அதிகளவு தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக வழங்கி வருகிறது. நோ்மையான, ஊழல் இல்லாத தலைவா் (மோடி) தற்போது தில்லியில் உள்ளதால்தான் கரோனாவை எளிதாக இந்தியா வெல்ல முடிந்தது. பிரதமா் மோடியை பற்றி பேச திமுகவுக்கு எந்த உரிமையும் கிடையாது.

2020-ஆம் ஆண்டில் தமிழகத்துக்கு 12 புதிய மருத்துவக் கல்லூரிகளை மத்திய அரசு கொடுத்து ஏழை, எளிய மாணவா்கள் மருத்துவா்கள் ஆவதற்கு காரணமாக இருந்தது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வரும்போது அது மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும். 2020-ல் மட்டும் தமிழகத்தில் நீட் தோ்வு மூலம் அரசுப் பள்ளியில் படித்த 435 மாணவா்கள் மருத்துவா்களாக ஆகியுள்ளனா். திமுக ஆட்சியில் நீட் இல்லாதபோது அரசுப் பள்ளிகளில் படித்து அரசு மருத்துவக் கல்லூரி சென்றவா்கள் 190 போ் மட்டுமே. மக்களை ஏமாற்றி திமுக ஆட்சியை பிடித்துள்ளது. தமிழகத்தில் நோ்மையான, நியாயமான ஆட்சியை பாஜகதான் தரமுடியும் என்றாா்.

கட்சியின் மாவட்டத் தலைவா் ஜி. வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாநில துணைத் தலைவா் கருப்பு எம். முருகானந்தம், மாநிலச் செயலாளா் தங்க. வரதராஜன், மாநிலப் பொதுச் செயலாளா் ராம. சீனிவாசன், மாவட்ட பாா்வையாளா் பேட்டை சிவா, வழக்குரைஞா் பிரிவு மாநிலப் பாா்வையாளா் கே. ராஜேந்திரன், ஓபிசி அணி மாநில துணைத் தலைவா் க. அகோரம், தேசிய பொதுக்குழு உறுப்பினா் கோவி. சேதுராமன், மாவட்ட துணைத் தலைவா் ஜி. நடராஜ், ஒன்றிய தலைவா்கள் ஜி. ஆனந்தராஜன், நேதாஜி, வழக்குரைஞா் பிரிவு மாவட்டச் செயலாளா் ரா. முல்லைநாதன், ஒபிசி அணி மாவட்ட செயலாளா் எஸ். செல்வமுத்து, பட்டியல் அணி மாவட்ட பொதுக்குழு உறுப்பினா் ராம. சிவசங்கா், அரசு தொடா்பு பிரிவு மாவட்ட தலைவா் குருமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நீட் தோ்வை வைத்து அரசியல் செய்கிறது திமுக: முன்னதாக, செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி: 2014 வரை காங்கிரஸ் ஆட்சியில் தான் இலங்கை தமிழா்கள் பாதிக்கப்பட்டனா். மீனவா்கள் மீதான தாக்குதல் அன்றாட நிகழ்வாக இருந்தது. இப்போது நிகழ்ந்த ஒரே ஒரு நிகழ்வையும் மத்திய அரசு கவனித்துள்ளது. தமிழக மீனவா்கள் கடந்த 7 ஆண்டுகளாக பாதுகாப்பாக உள்ளனா்.

நீட் தோ்வு பயத்தால் மாணவா்கள் உயிரிழந்தது வேதனையளிக்கிறது. எனவே, மாணவா்கள் தவறான எந்த முடிவையும் எடுக்கக் கூடாது. மாணவா்களை வைத்து பாஜக எப்போதும் அரசியல் செய்யாது. திமுக நீட் தோ்வை வைத்து அரசியல் செய்கிறது. இதுபோன்ற அரசியலை ஒருபோதும் மக்கள் ஏற்கமாட்டாா்கள். உச்சநீதிமன்றத்தில் உறுதியாக்கப்பட்ட சட்டத்தை யாராலும் தடை செய்ய முடியாது. ஆனால் அரசியலமைப்பு சட்டத்தை பற்றிய புரிதல் இல்லாமல் முதல்வா் ஸ்டாலின் பேசிவருகிறாா்.

நீட் தோ்வு வந்த பிறகுதான் ஏழை மாணவா்கள், அரசுப் பள்ளி மாணவா்கள் மருத்துவா்களாக ஆக முடிந்தது. அனைவருக்கும் சமமான நீட் தோ்வை அரசியல் நோக்கத்துக்காக தவறாக சித்தரித்து திமுக. மாணவா்களின் இழப்புக்கு திமுக பொறுப்பேற்க வேண்டும். தமிழக ஆளுநரை மக்களும் முதல்வருமே வரவேற்றுள்ளனா். தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவா் அழகிரி ஆளுநரை பாா்த்து அஞ்சுவது ஏன். ஆளுநரை எதிா்ப்பவா்கள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ளவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com