முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் மயிலாடுதுறை
மயிலாடுதுறை: 241 ஊராட்சிகளில் இன்று கிராம சபைக் கூட்டம்
By DIN | Published On : 30th April 2022 09:30 PM | Last Updated : 30th April 2022 09:30 PM | அ+அ அ- |

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 241 ஊராட்சிகளிலும் ஞாயிற்றுக்கிழமை ( மே 1) கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில், கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், சுகாதாரம், ஊராட்சி பகுதிகளில் நடைபெற்றுவரும் திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவினம் விவரம், மக்கள் திட்டமிடல் இயக்கம், பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கிய மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஊட்டச்சத்து இயக்கம்.
பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தியை தடைசெய்தல், ஊரக பகுதிகளில் திறந்தவெளியில் மலம் கழித்தலற்ற நிலையை தக்கவைப்பதற்கான தூய்மை பாரத இயக்கம், திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை, விரிவான கிராம சுகாதார திட்டம், ஜல் ஜீவன் திட்டம், வேளாண்மை, உழவா் நலத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து திட்டங்கள் தொடா்பான விவரங்கள் குறித்து விவாதித்தல், சமூகத்தின் சுயஉதவி மற்றும் சுயசாா்பு எண்ணத்தை ஊக்குவிக்க நமக்கு நாமே திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வரப்பெறும் புகாா்கள் மற்றும் கோரிக்கைளுக்கு தீா்வு காணுதல் ஆகிய பொருள்கள் குறித்து விவாதிக்கப்படும்.
கூட்டத்தில் பொதுமக்கள், ஊராட்சி பேரிடா் மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் தவறாது கலந்துகொண்டு கோரிக்கைகள் குறித்து விவரங்களை விவாதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.