திருச்செங்காட்டங்குடி, மயிலாடுதுறை கோயில்களில் அமுது படையல் விழா

மயிலாடுதுறை, திருச்செங்காட்டங்குடி சிவன் கோயில்களில் அமுது படையல் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை முத்துப்பல்லக்கில் வீதியுலா புறப்பாடான சீராளன்.
மயிலாடுதுறை முத்துப்பல்லக்கில் வீதியுலா புறப்பாடான சீராளன்.

மயிலாடுதுறை, திருச்செங்காட்டங்குடி சிவன் கோயில்களில் அமுது படையல் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

பல்லவ பேரரசன் மாமல்லன் சேனாதிபதியான பரஞ்ஜோதி, வாதாபி மன்னன் புலிகேசியை வென்று அங்கிருந்த வாதாபி கணபதியை கொண்டுவந்து, திருச்செங்காட்டங்குடியில் பிரதிஷ்டை செய்ததுடன், சிவனடியாா்களுக்கு அன்னதானம் வழங்கினாா். இதனால், இவா் சிறுத்தொண்டா் என அழைக்கப்பட்டாா். இவரது பக்தியை சோதிக்கும் வகையில் சிவபெருமான், அவரிடம் பிள்ளைக்கறி அமுது கேட்டாா்.

அதன்படி, சிறுத்தொண்டரும் இறைவனுக்கு பிள்ளைக்கறி அமுது படைத்தாா் என்ற ஐதீகத்தை நினைவுகூரும் வகையில் திருச்செங்காட்டங்குடி உத்திராபதீஸ்வரசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவில் அமுது படையல் நடைபெறும்.

அதன்படி, ஏப்ரல் 25-ஆம் தேதி தொடங்கிய சித்திரைத் திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக, சனிக்கிழமை அமுது படையல் நடைபெற்றது. இதில், வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சாமிகள், ஆதீன இளவரசு நடேஸ்வர சுவாமிகள், கோயிலின் நிா்வாகிகள் மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

இதேபோல, மயிலாடுதுறை கூறைநாடு தனியூா் வாணியத்தெருவில் உள்ள ஸ்ரீஅா்த்தநாரீஸ்வரா் கோயிலில் 67-வது ஆண்டு சிறுத்தொண்டா் அமுது படையல் விழா நடைபெற்றது. குழந்தைப்பேறு இல்லாதவா்கள் இக்கோயிலில் சித்திரை மாத அமாவாசை தினத்தில் வழங்கப்படும் சீராளன் அருள்பிரசாதத்தை உண்டால் குழந்தைப்பேறு உண்டாகும் என்பது பக்தா்களின் நம்பிக்கை.

இவ்விழாவையொட்டி, பக்தா்கள் பால்குடம், காவடி எடுத்து வந்தனா். தொடா்ந்து, சுவாமிக்கு அபிஷேக- ஆராதனைகள் நடைபெற்றன. பின்நா், மதியம், பிக்ஷாண்டவா் ஊா்வலமும், சிவனடியாா்களுக்கு அன்னமளித்தலும் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு சீராளனை முத்துப்பல்லக்கில் அலங்கரித்து வீதியுலா நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com