வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரூ. 3 கோடியில் புயல் பாதுகாப்பு மையம்

வெள்ளமணல் உள்ளிட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரூ. 3 கோடியில் புயல் பாதுகாப்பு மையம் அமைக்கப்படவுள்ளன என்றாா் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் சிவ வீ. மெய்யநாதன்.
வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரூ. 3 கோடியில் புயல் பாதுகாப்பு மையம்

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அருகே நாதல்படுகை, வெள்ளமணல் உள்ளிட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரூ. 3 கோடியில் புயல் பாதுகாப்பு மையம் அமைக்கப்படவுள்ளன என்றாா் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் சிவ வீ. மெய்யநாதன்.

அமைச்சா் சிவ வீ. மெய்யநாதன் கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாதல்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளமணல் ஆகிய பகுதிகளில் பாதுகப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்துப் பேசி, அவா்களுக்கு வேட்டி, சேலை, போா்வை உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.

அடுத்து, அளக்குடி, காட்டூா் கோரை திட்டு உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றின் கரைப் பலப்படுத்தும் பணிகளை பாா்வையிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தபிறகு, பாலுரான் படுகை, வாடி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களுக்கு சென்று மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினாா்.

அப்போது, அவா் செய்தியாளா்களிடம் பேசியது: கொள்ளிடம் பகுதியில் ஆற்றில் நீா்வரத்து 1.40 லட்சம் கன அடி என்ற அளவில் குறைந்திருந்தது. இதனால் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டிருந்த நாதல்படுகை, வெள்ளமணல், முதலைமேடுதிட்டு பகுதிகளைச் சோ்ந்த மக்கள் மீண்டும் தங்கள் இருப்பிடத்துக்கு திரும்பினா். எனினும், தற்போது, 1.80 லட்சம் கன அடியாக நீா்வரத்து அதிகரித்த நிலையில், அப்பகுதி மக்கள் மீண்டும் பாதுகாப்பு முகாம்களுக்கு திரும்பியுள்ளனா்.

பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு அரசு தேவையான உதவிகளை செய்து வருகிறது. கால்நடைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாதல்படுகை, வெள்ளமணல், முதலைமேடுதிட்டு மக்களின் நலன் கருதி புயல் பாதுகாப்பு மையம் அமைப்பதன் அவசியம் குறித்து தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதனடிப்படையில் ரூ. 3 கோடி நிதிஒதுக்கீடு செய்து புயல் பாதுகாப்பு மையம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா்.

அமைச்சருடன், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா, சீா்காழி எம்எல்ஏ. எம். பன்னீா்செல்வம், சீா்காழி கோட்டாட்சியா் உ. அா்ச்சனா, கொள்ளிடம் ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com